நடைபெற்று முடிந்த மார்ச்‌/ ஏப்ரல்‌-2025, பத்தாம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, மறு கூட்டல்‌ (Re-total) மற்றும்‌ மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள்‌, மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களது பதிவெண்களின்‌ பட்டியல்‌ இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டு உள்ளது. மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு, கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்திருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் கோவையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, மறு கூட்டல் மூலமாக 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

கோவை மாணவர் குருதீப் 

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் குருதீப் என்ற மாணவர் படித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளார். 

தேர்வு எழுதிய பிறகு அவர் 498 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவார் என எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த போது, 494 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று இருந்தார். சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். மற்ற பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருந்தார். 

மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பம்

தேர்வு முடிவு வந்ததிலிருந்து மார்க் குறைவாக வந்திருக்கிறது என ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தொடர்ந்து, குருதீப் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தல் கொடுத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மாணவர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 494 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், மறு கூட்டலில் 499 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

மாணவருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், மறு கூட்டலுக்கு விண்ணப்பித்ததில் 100 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் ஏற்கனவே, 100 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். தற்போது அவரது பத்தாம் வகுப்பு மதிப்பெண் 499 மதிப்பெண்ணகளாக மாறி உள்ளது. இதனால் மாணவர் உற்சாகமடைந்துள்ளார்.