மதச்சார்பு சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறுபான்மையினர் நலன் தொடர்பாக முதல்வர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பொதுவாக கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசு சார்பில், மதச்சார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இனி காலம் குறிப்பிடாமல், நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் மேம்பாட்டுக்காக நல வாரியம்
சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு
கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவிச் சங்கம் கூடுதலாக துவங்கிட நிதி ஒதுக்கீடு ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிகக் கடன்கள் என நமது திராவிட மாடல் அரசின் சார்பில் கிறித்தவ மக்களுக்காக எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கெல்லாம் மணிமகுடமாக, கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தனித்தீர்மானம்கொண்டு வந்து நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
இப்படி எண்ணற்ற திட்டங்களை கலைஞர் காலம் தொட்டு, நாங்கள் சிறுபான்மையினரின் நலனைக் கருத்தில்கொண்டு திட்டங்களைத் தட்டி, அவற்றைச் செம்மையாக, உறுதியோடு செயல்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில், இங்கே நீங்கள் தெரிவித்திருக்கிற கருத்துக்களின் அடிப்படையிலும், கோரிக்கைகளின் அடிப்படையிலும் அரசு சார்பில் நாங்கள் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.
உபதேசியர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்வதற்கான நிபந்தனைகள் களர்வு செய்யப்பட்டு, அது இம்மாத இறுகிக்குள் தொடங்கப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான Web Portal இந்த மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
கிறித்துவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு அரசு நிதியுதவி வழங்குவதற்கு திருத்தியமைக்கப்பட்ட வழிமுறைகளும் (Revised Guidelines) இம்மாத இறுகிக்குள் வெளியிடப்படும்.
கிறித்துவக் கல்லறைகளில் மீண்டும் ஒரு உடலை அடக்கம் செய்வதற்கு தற்போதுள்ள விதிகளைத் தளர்த்தி சவப்பெட்டியில்லாமல் புகைக்கப்பட்ட இடத்தில் 12 மாதங்களுக்குப் பிறகு வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;
மரத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில் 18 மாதங்களுக்குப் பிறகு அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;
உலோகத்தினால் செய்யப்பட்ட சவப்பெட்டியில் புதைக்கப்பட்ட இடத்தில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதே குடும்பதைச் சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தைப் புதைக்க அனுமதி அளிக்கும் ஆணையையும்;
சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள கிறித்துவக் கல்லறையில் இருப்பதைப் போன்று உடல்களை அடுக்ககப் பெட்டகங்களில் அடக்கம் செய்ய அனுமதியளிக்கும் ஆணையையும் இந்த வார இறுகிக்குள்ளாக வெளியிடப்படும் என்பதைச் தெரிவித்துக் கொள்கிறேன்’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.