தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு (CNLUs) நடத்திய பொதுச் சட்ட நுழைவுத் தேர்வு (CLAT) 2026-க்கான முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. இதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி கீதாலி குப்தா, மொத்தமுள்ள 119 மதிப்பெண்களுக்கு 112.75 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
காட்டுத் தீயாகப் பரவிய வீடியோ
இதற்கிடையே சமூக வலைதளங்களில் கீதாலி குப்தாவின் தேர்வு முடிவு குறித்த வீடியோ ஒன்று காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், கீதாலி தனது வீட்டில் உள்ள பூஜை அறையின் முன் தரையில் அமர்ந்தபடி உள்ளார். மிகவும் பதற்றத்துடன் தனது செல்போனில் தேர்வு முடிவுகளைத் தேடுகிறார் கீதாலி.
தேர்வு முடிவுகள் திரையில் தெரிந்ததும், ஒரு கணம் பேச்சற்றுப் போகும் அவர், தன் கண்களை அகல விரித்து வாயைப் பொத்திக் கொள்கிறார். தான் முதலிடம் பிடித்ததை உணர்ந்து ஆனந்தக் கண்ணீர் விடுகிறார் கீதாலி. அந்தத் தருணத்தில் ஓடி வரும் அவரது தாயார், மகளைக் கட்டித் தழுவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இந்தத் தாய்- மகள் பாசமும், மாணவியின் உண்மையான உணர்வுகளும் காண்போரை நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவை கீதாலி படித்த பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அகில இந்திய அளவில் முதலிடம்
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த கீதாலி, 11-ம் வகுப்பில் கலைப் பிரிவை (Humanities) தேர்ந்தெடுத்து அரசியல் அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களைப் படித்தவர். கிளாட் தேர்வை அண்மையில் இவர் எழுதி இருந்த நிலையில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இது கீதாலியின் கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த எனப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
96 சதவீதம் வருகைப் பதிவு
இந்த ஆண்டு நடைபெற்ற CLAT தேர்வில் 96.01% வருகை பதிவானது. தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, முதல் 100 தரவரிசைப் பட்டியலில் 64 மாணவர்களும், 36 மாணவிகளும் இடம் பெற்றுள்ளனர். நகரங்கள் வாரியாகப் பார்த்தால், பெங்களூருவில் இருந்து அதிகபட்சமாக 15 பேரும், டெல்லி மற்றும் மும்பையில் இருந்து முறையே 8 மற்றும் 7 பேரும் முதல் 100 இடங்களுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.