12ம் வகுப்பு சிறப்புத் தேர்வில் (Improvement Exams)  பெறப்படும்  மதிப்பெண்களே இறுதியானது என்ற சிபிஎஸ்இ-ன் வழிமுறையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.   


முன்னதாக, சிபிஎஸ்இ கல்வி வாரியம் கடந்தாண்டு 12ம் ஆண்டு மாணவர்களுக்கான மதிப்பீடு முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர் யாராவது தனக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தியடையா விட்டால், சிறப்புத் தேர்வை எழுதலாம். ஆனால், சிறப்புத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது. அதாவது,பொதுத் தேர்வை  விட மதிப்பெண்கள் குறைவாக வந்தாலும், கூடுதலாக வந்தாலும் சிறப்புத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தது. 


சிபிஎஸ்இ-ன் இந்த நடவடிக்கையை எதிர்த்து, சுக்ரிதி மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர் (Sukriti & Ors v CBSE & Ors). நீதிபதிகள் ஏஎம் கன்வில்கார் மற்றும் சிடி ரவிகுமார்  ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. 




 


முன்னதாக, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த சிபிஎஸ்இ, " சிறப்புத் தேர்வு என்பது ஒருவகையான மதிப்பீட்டு முறையே. மாணவர்களின் கல்வித் திறன் அங்கு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. பாரபட்சமற்ற நிலை மற்றும் சமவாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தது. 


மேலும், 12ம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண்கள் வழங்குவதில் சரியான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறோம். ஏற்கனவே, மாணவர்களின் நலன் கருதி பல்வேறு சீர்திருத்தங்களை சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தியுள்ளோம். உதாரணமாக, சிறப்புத் தேர்வில் மாணவர் ஒருவர் தோல்வியடைந்தால், பழைய மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வதற்கான திருத்தமும் இதில் அடங்கும் என்று தெரிவித்தது.  


 ஆனால், சிபிஎஸ்இ-ன் இந்த புதிய நடைமுறையால் மாணவர்களின் உயர்க்கல்வி சேர்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிபிஎஸ்இ- ன் புதிய மதிப்பீட்டு முறையில் அர்த்தமில்லை என்று தெரிவித்தது.  "இரண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் எதிர்காலாத்தை பாதிக்கும் இத்தகைய போக்கை நியாயப்படுத்த முயற்சிக்கக் கூடாது" என்று கூறிய நீதிபதிகள், புதிய மதிப்பட்டு முறையை ரத்து செய்வதாக அறிவித்தனர். 


சிபிஎஸ்இ தேர்வு: 


கொரோனா இரண்டாவது அலை காரணமாக, கடந்தாண்டு 12ம் வகுப்புக்கான வாரியத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. முன்னதாக,  நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.