10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாளில் எழுத்துப் பிழை இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆங்கிலப் பொதுத் தேர்வு வினாத்தாளிலும் 3 கேள்விகளில் குழப்பம் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்தக் கேள்விகளுக்கு பதில் எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான மார்ச் 26-ல் தமிழ் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இரண்டாவதாக நேற்று (மார்ச் 28) ஆங்கிலப் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது.


3 கேள்விகளில் குழப்பம்


இந்த வினாத்தாளில் முதல் பிரிவில் 11ஆவது கேள்வியாக Watch என்னும் வார்த்தை, எந்த வார்த்தையோடு இணைந்து வரும்? (Compund Word) என்று கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு விடையாக, Watchhouse, Watchman என்பன உள்ளிட்ட தெரிவுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. இதில், Watchman என்னும் விடை அதிகம் பயன்படுத்தப்படும் Compund Word ஆக இருந்தாலும், Watchhouse என்னும் வார்த்தையும் பயன்பாட்டில் உள்ளது. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இரு விடைகள் சரியாக வருவதால், இந்த கேள்விக்கு பதிலளித்த மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.




இரண்டாவது பிரிவில் 18ஆவது கேள்வியாக What was Frank sorry for? என்பதில், Franz என்பதற்கு பதிலாக Frank என்று கேட்கப்பட்டிருந்தது. புத்தகப் பாடத்தித்தில் Franz என்றே ஒருவர் குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், புத்தகத்துக்குப் பின்புறம் உள்ள கேள்வியில் தவறுதலாக Frank என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே கேள்வி, பொதுத் தேர்விலும் தற்போது கேட்கப்பட்டுள்ளது. எனினும் Frank என்னும் பெயரே பாடத்தில் இல்லாததால், இந்தக் கேள்விக்கு பதிலளித்த மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


பாடத்தில் இடம்பெறாத கதாபாத்திரம்


அதேபோல, 46ஆவது B கேள்வியில், ஷேக்ஸ்பியரின் The Tempest என்னும் நாடகத்தில் இருந்து Alonso என்னும் கதாபாத்திரம் குறித்துக் குறிப்பி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரம் நாடகத்தில் இருக்கும் என்றாலும், 10ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இல்லை. அதனால்  இந்தக் கேள்விக்கு விடை அளித்த மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.




தமிழ் பாடத்திலும் குழப்பம்


முன்னதாக தமிழ் பாடத்தில் 33ஆவது கேள்வியில் நெடுநாளாகப் பார்க்க எண்ணியிருந்த உறவினர் என்று தொடங்கும் கேள்வியில் எண்ணியிருந்த என்பதற்கு பதிலாக பண்ணியிருந்த என்று குறிப்பிடப்பட்டு இருந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.


அடுத்ததாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


16,550 மாணவர்கள் ஆப்சென்ட்


10ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வை எழுத 16,550 மாணவர்கள் வரவில்லை என்றும் 4 தனித் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.