ஆசிட் வீச்சு அவளின் கண்களை எரித்திருக்கலாம். கனவுகளை அல்ல. சண்டிகரைச் சேர்ந்த பார்வையை இழந்த 17 வயதுச் சிறுமி கஃபி, தன்னுடைய கடும் உழைப்பால் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 95.6 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார்.

Continues below advertisement

நடந்தது என்ன?

சண்டிகரைச் சேர்ந்த கஃபி 3 வயதாக இருக்கும்போது, அவர்களின் குடும்பச் சண்டை காரணமாக ஆசிட் வீச்சுக்கு உள்ளானார். இதனால், அவரின் கண்கள் இருட்டுக்குள் வீழ்ந்தன. பலகட்ட காயங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கணக்கில் சிகிச்சை எடுத்துக் கொண்டார் கஃபி. பார்வையற்றோர் நிறுவனத்தில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.

கஃபியின் தந்தை பவான், ஹரியானா தலைமைச் செயலகத்தில் பியூனாகப் பணியாற்றுகிறார். அம்மா சுமன் இல்லத்தரசி. இருவரும் 5ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலும், தன் மகள் படித்து முன்னேற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

ஐஏஎஸ் ஆக ஆசை

இதுகுறித்து மாணவி கஃபி கூறும்போது, ’’ஆரம்பத்தில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தால், எளிதாக மாறியது.

ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மானுடவியல் சார்ந்து படிக்க வேண்டும். தினசரி 2 முதல் 3 மணி நேரம் படிக்கிறேன். 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 95.2 சதவீத மதிப்பெண்களைப் பெற்றேன்.

ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவேன்

என்னுடைய போராட்டம் தொடர்கிறது. கடினமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமில வீச்சு தொடர்பான வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. ஒருநாள் நிச்சயம் இந்த வழக்கில், வெற்றி பெற்று நீதி பெறுவேன்’’ என்று மாணவி கஃபி தெரிவித்துள்ளார்.