இந்தியாவின் எதிர்கால இளம் தலைமுறையை தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்திற்கு தயார்படுத்தும் வகையில், மத்தியக் கல்வி அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, 2026- 27ஆம் கல்வியாண்டு முதல், 3ஆம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Continues below advertisement

சிபிஎஸ்இ பள்ளி கல்விச் செயலாளர் சஞ்சய் குமார் இதற்கான நெறிமுறைகள் தயார் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசும்போது, "நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான ஆசிரியர்களை அணுகி, அவர்களுக்கு AI தொடர்பான கல்வி கற்பிப்பதற்கான பயிற்சியை அளிப்பது சவாலான ஒன்றுதான். எனினும் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த தொழில்நுட்பத்துடன் சரியாக இணைந்து செயல்பட நாம் விரைவாக செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

ஆரம்பகட்ட திட்டங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி

ஆசிரியர்கள் ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி பாடம் நடத்த, ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்திற்காக கற்பவர்களையும் கல்வியாளர்களையும் தயார்படுத்துவதே இதன் நோக்கம்.

Continues below advertisement

தற்போது, 18,000 சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் AI ஒரு திறன் பாடமாக கற்பிக்கப்படுகிறது. 15 மணிநேர மாட்யூலாக ஏஐ கற்பிக்கப்படுகிறது. அதேபோல, 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏஐ ஒரு விருப்பப் பாடமாக உள்ளது.

அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை

2019ஆம் ஆண்டு முதல், இன்டெல், ஐபிஎம் மற்றும் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (NIELIT) ஆகியவற்றின் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஏஐ பயிற்சி பெற்றுள்ளனர். AI தொடர்பான பாடங்களில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு 9- 10 ஆம் வகுப்புகளில் 7.9 லட்சம் மாணவர்களும், 11- 12 ஆம் வகுப்புகளில் 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஏஐ படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இது திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது முறையே சுமார் 15,000 மற்றும் 2,000 மாணவர்கள் மட்டுமே ஆர்வத்துடன் சேர்ந்தனர்.

கல்வி நிறுவனங்கள் தொழில்நுட்பம் சார்ந்த கற்றலை அதிக அளவில் ஏற்றுக்கொள்வதால், ஏஐ தற்போது அடிப்படை எழுத்தறிவு என்ற நிலைக்கு மாறி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அடிப்படை எழுத்தறிவு

சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஏஐ ஒரு சிறப்புப் படிப்பாக இருக்காமல், ஓர் அடிப்படைத் திறனாக மாற வேண்டும். இன்றைய மூன்றாம் வகுப்பு மாணவர் 2035-ல் பள்ளிப் படிப்பை முடிக்கும்போது, ஏஐ கூடுதல் திறமையாக இருக்காது. அது ஓர் அத்தியாவசியத் தேவையாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.