மத்திய அரசு கொண்டு வந்த பிஎம் ஸ்ரீ (முன்னேறும் இந்தியாவுக்கென பிரதம மந்திரியின் பள்ளிகள்) திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் இதற்கெனக் குழு அமைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் மத்திய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. எனினும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று கூறி வருகிறது. மாநிலத்துக்கெனத் தனியாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக அரசு வேறு வேறு பெயர்களில் அமல்படுத்தி வருவதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.


பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்தக் குழு


இதற்கு இடையில் மத்திய அரசு கொண்டு வந்த பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைத் தமிழகத்தில் அமல்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் இதற்கெனக் குழு அமைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் கல்வித்துறை செயலர் சஞ்சய் குமார் ஐஏஎஸ்-க்குக் கடிதம் எழுதி உள்ளார்.


அந்தக் கடிதத்தில், ’’தமிழக அரசு கல்வித் துறையில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. தன்னுடைய மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வியை அளிப்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மிகவும் ஆர்வமாக உள்ளது. இதற்காக பள்ளிக் கல்வித்துறைச் செயலர் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கு முன்னால் ஒப்பந்தம்


குழுவின் பரிந்துரை அடிப்படையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டு தொடங்கப்படும் முன் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் தமிழக அரசு, தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்துவதில் ஆர்வமாக இருப்பது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.  


அது என்ன பிஎம் ஸ்ரீ திட்டம்?


2020ஆம் ஆண்டு ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடி, பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தினார். பிஎம் ஸ்ரீ திட்டம் (Pradhan Mantri Schools for Rising India (PM-Shri) என்பது முன்னேறும் இந்தியாவுக்கென பிரதம மந்திரியின் பள்ளிகள் என்பதாகும். இதன்படி நாடு முழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுகளின் பள்ளிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


பிஎம் ஸ்ரீ திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளது.  மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள், மாநில அரசு / யூனியன் பிரதேசங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.