பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய  கல்விக்கொள்கையை அமல்படுத்தியுள்ளது. மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக இந்த புதிய கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுத்துள்ளது. 

நிதி கிடையாது:

இந்த நிலையில், காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சிக்கு வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது, தமிழ்நா்டில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் வரை நிதி ஒதுக்கீடு இல்லை. புதிய கல்விக்கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு என்பது விதிமுறை. 

நாட்டில் உள்ள பிற மாநிலங்கள் எல்லாம் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் செயல்படும் சிபிஎஸ்இ மற்றும் கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் கூட மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. 

மும்மொழி கொள்கை:

தமிழகத்தில் மாணவர்கள் மும்மொழி கொள்கையில் நன்றாக படித்து வருகிறார்கள். பிறகு ஏன் மூன்று மொழிக்கொள்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள்? அதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு மாணவர் தமிழ், கன்னடம், ஆங்கிலம் கற்றுக்கொள்ள முயற்சித்தால் என்ன தவறு? அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள்?

மாநில மொழிக்காக முக்கியத்துவம் அளிக்கும் புதிய கல்விக்கொள்கையை அரசியலுக்காக தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. 

இவ்வாறு அவர் பேசியுள்ளார். 

தி.மு.க. - பா.ஜ.க. மோதல்

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கல்வித்துறைக்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காத காரணத்தால் பல்வேறு  திட்டங்கள் கிடப்பில் இருப்பதாகவும், ஊதியம் வழங்குவதிலும் சிரமம் இருப்பதாவும் தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் திராவிட கட்சிகள் மும்மொழிக்கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

மேலும், புதிய கல்விக்கொள்கையை ஏற்காத காரணத்தால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு விடுவிக்கப்படாமல் இருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் பல முறை மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டும் நிதி ஒதுக்கப்படவில்லை. 

குலத்தொழில், சமஸ்கிருதம்:

புதிய கல்விக்கொள்கை குலத்தொழிலுக்கு வித்திடுவதால் எதிர்ப்பதாக சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். தேசிய கல்விக்கொள்கையில் சமஸ்கிருதம் திணிக்கப்படுவதாகவும், தன்னாட்சிக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் சொல்வதன் காரணமாகவும் தேசிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதாகவும்  திமுக அரசு விளக்கம் அளித்து வருகிறது.

இந்த மோதல் காரணமாக மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி கிடைக்காமல் தமிழக பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர் என்று கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.