சிபிஎஸ்இ பெயரில் பல்வேறு சமூக வலைதளங்களில், போலி கணக்குகள் செயல்பட்டு வருவதாகவும் இவை குறித்து ஆசிரியர்களும் மாணவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நாளை தொடங்க உள்ளன. இரண்டு தேர்வுகளுமே பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்க உள்ளன. 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


கையெழுத்து கட்டாயம்


இந்த நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்றும் வருகின்றன. மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு, அதில் முதல்வரிடம் கையெழுத்து பெற வேண்டும். கையெழுத்து இடப்படாத ஹால் டிக்கெட்டுக்கு அனுமதி இல்லை. அத்தகைய ஹால் டிக்கெட்டை வைத்திருக்கும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாணவர்களின் மன நலன் கருதி இந்த ஆண்டு முதல், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அறிவிக்கப்படாது என்று ஏற்கெனவே சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 


போலி கணக்குகள்


இதற்கிடையே சிபிஎஸ்இ பெயரில் பல்வேறு சமூக வலைதளங்களில், போலி கணக்குகள் செயல்பட்டு வருவதாகவும் இவை குறித்து ஆசிரியர்களும் மணவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல போலி கணக்குகள் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சிபிஎஸ்இ, ’’கீழே குறிப்பிட்டுள்ள சமூக வலைதள கணக்குகள், சிபிஎஸ்இ பெயரையோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்தி, பொதுமக்களுக்குத் தவறான தகவலை அளித்து வருவதாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.




இந்த நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள சமூக வலைதள கணக்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கான @cbseindia29 என்ற பக்கத்தை மட்டுமே பின்பற்றுமாறும், அதில் மட்டுமே சிபிஎஸ்இ-ன் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்றும் பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


சிபிஎஸ்இ இனி பொறுப்பாகாது


சமூக வலைதளங்களில் சிபிஎஸ்இ பெயரால் பகிரப்படும் தகவல்களுக்கு, சிபிஎஸ்இ இனி பொறுப்பாகாது என்றும் கூறிக் கொள்கிறோம்’’ என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.


முன்னதாக, வினாத்தாள் கசிவு குறித்து விளக்கம் அளித்த சிபிஎஸ்இ, ’’பொதுத் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்துள்ளதாக ஃபேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவின. போலி வினாத்தாள் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. வினாத்தாள் குறித்த போலி இணைப்புகளும் அதிகம் பகிரப்பட்டன. அவற்றில் உண்மை இல்லை’’ என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்க்து.