சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்  2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை (Admit Card) தற்போது வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தனித் தேர்வர்களாக (Private Candidates) விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் அனுமதிச் சீட்டை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Continues below advertisement

தேர்வுகள் எப்போது?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9, 2026 வரை நடைபெற உள்ளன. தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டைத் தெளிவாக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வு மையத்திற்கு ஹால் டிக்கெட் இல்லாமல் வரும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால், இதனை முன்கூட்டியே தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Continues below advertisement

ஹால் டிக்கெட்டில் உள்ள விவரங்கள்

தேர்வுக்கான அனுமதிச் சீட்டில் மாணவரின் பெயர், ரோல் நம்பர் (Roll Number), தேர்வு நடைபெறும் பாடங்கள் மற்றும் தேதிகள், எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகளின் விவரங்கள், தேர்வு மையத்தின் முகவரி, மையக் குறியீடு (Center Code) மற்றும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?


தனித்தேர்வர்கள் கீழ்க்கண்ட எளிய படிநிலைகளைப் பின்பற்றி ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்:

  1. முதலில் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

  2. முகப்புப் பக்கத்தில் உள்ள 'தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்' (Admit Card for Private Candidates) என்ற இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. உங்கள் வகுப்பு (10 அல்லது 12) மற்றும் கேட்கப்படும் லாகின் விவரங்களை (Application Number/ Previous Roll Number) உள்ளிடவும்.

  4. இப்போது திரையில் தோன்றும் உங்களது ஹால் டிக்கெட்டைச் சரிபார்த்து, அதனைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.


ஹால் டிக்கெட்டில் உள்ள உங்களின் பெயர், புகைப்படம் அல்லது பாடப் பிரிவுகளில் ஏதேனும் பிழைகள் இருப்பதை மாணவர்கள் கவனித்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தைத் (Regional Office) தொடர்பு கொண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. கடைசி நேரத் தவிப்புகளைத் தவிர்க்க மாணவர்கள் இப்போதே ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து விவரங்களைச் சரிபார்ப்பது நல்லது.