பள்ளிகளில் நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்கவும், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அனைத்துப் பள்ளிகளுக்கும் மிக முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அண்மையில் உச்ச நீதிமன்றம் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாகப் பள்ளி வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் நாய்க் கடிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே, பள்ளிகளில் மாணவர்களின் முழுமையான நல்வாழ்வை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிபிஎஸ்இ கறாராக உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கு விலங்குகளிடம் பாதுகாப்பாக நடந்துகொள்வது எப்படி, எதிர்பாராத விதமாக நாய் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் மற்றும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும் முறைகள் குறித்து பள்ளிகள் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்த வேண்டும். உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து, பள்ளி வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு
- வளாகப் பாதுகாப்பு: பள்ளி வளாகத்தைச் சுற்றிப் போதுமான வேலிகள் (Fencing), உறுதியான எல்லைச் சுவர்கள் மற்றும் வாயில்கள் இருப்பதை உறுதி செய்து, பள்ளியைப் பாதுகாப்பான பகுதியாக மாற்ற வேண்டும்.
- நோடல் அதிகாரி நியமனம்: பள்ளியின் தூய்மை மற்றும் பராமரிப்பைக் கண்காணிக்க ஒரு பிரத்யேக 'நோடல் அதிகாரியை' (Nodal Officer) நியமிக்க வேண்டும். அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைப் பள்ளி நுழைவாயிலில் அனைவரும் பார்க்கும் வகையில் ஒட்டி வைக்க வேண்டும்.
- காலாண்டு ஆய்வு: பள்ளி வளாகத்திலோ அல்லது அருகாமையிலோ தெரு நாய்கள் தங்குவதற்கு ஏதுவான இடங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை
உணவுக் கழிவுகள் நாய்களை ஈர்க்கும் என்பதால், பயனுள்ள கழிவு மேலாண்மை மற்றும் முறையான வடிகால் அமைப்புகளைப் பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ரேபிஸ் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பள்ளிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். மேலும், மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) பின்பற்றிச் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.