சமீபத்தில் வெளியான 2026-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன.
நடந்தது என்ன?
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாணவர்களும், பெற்றோர்களும் சமூக வலைத்தளங்களில் புகார் எழுப்பினர்.
குறிப்பாக, ஜேஇஇ போன்ற கடினமான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கூட, சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் தோல்வியடைந்தது பலத்த சந்தேகங்களை கிளப்பியது. இது குறித்து தேசிய அளவில் கல்வியாளர்களும் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்திருந்தனர்.
இந்தப் புகார்களுக்கு பதிலளிக்கும் விதமாக சிபிஎஸ்இ நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கமளித்துள்ளது. அதில், விடைத்தாள்களைத் திருத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) எனப்படும் டிஜிட்டல் முறையே மிகச் சரியானது என சிபிஎஸ்இ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்த நவீன முறையின் மூலம், விடைத்தாள்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும், எவ்விதப் பாரபட்சமின்றியும் திருத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மனிதத் தவறுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவரின் விடைக்கும் படிநிலை அடிப்படையில் (Step-wise marks) முறையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த தேர்ச்சி விகிதம்
இந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 85.2 சதவீதமாகச் சரிந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த தேர்ச்சி விகிதம் இதுவாகும். எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளில் தனித்தனியாக குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற முடியும் என்ற விதியையும் வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், மதிப்பெண்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டுப் பணிகள் வரும் மே 19-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. குறைவான மதிப்பெண்கள் வந்துள்ளதாகக் கருதும் மாணவர்கள், முதலில் தங்கள் திருத்தப்பட்ட விடைத்தாள் நகலை பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த நகலைச் சரிபார்த்த பின், குறிப்பிட்ட வினாக்களுக்கு மட்டும் மறுமதிப்பீடு செய்யக் கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மதிப்பெண்கள் திருத்தி வழங்கப்படும்
கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய கட்டணத்தைச் செலுத்தி மாணவர்கள் இந்த நடைமுறையை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மறுமதிப்பீட்டின் போது ஏதேனும் பிழைகள் கண்டறியப்பட்டால், உடனடியாக அதற்கான தீர்வு காணப்பட்டு மதிப்பெண்கள் திருத்தி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டண விவரங்கள் மற்றும் விரிவான கால அட்டவணை விரைவில் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
