CBSE Class 12 Supplementary Exam 2025: 2024- 25ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளின் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், 2 வாரத்திலேயே தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

Continues below advertisement

தேர்ச்சி வீதம் எவ்வளவு?

இதுகுறித்து வெளியான தகவலின்படி, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு 1,43,581 மாணவர்கள் விண்ண்ப்பித்து இருந்தனர். இதில், 1,38,666 பேர் தேர்வை எழுதினர். இதில் வெறும் 53,201 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளன. இது 38.36 சதவீதம் மட்டுமே ஆகும்.

வழக்கம்போல, மாணவிகளே மாணவர்களைக் காட்டிலும் அதிகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவிகள் 41.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவர்கள் 36.79% தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 4.56 சதவீதம் குறைவாகும். மூன்றாம் பாலின மாணவர்கள் யாரும் தேர்ச்சி பெறவில்லை.

Continues below advertisement

யாருக்கெல்லாம் துணைத் தேர்வுகள் நடைபெற்றன?

  • 5 கட்டாயப் பாடங்களுக்கான தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தவர்கள்
  • 5 பாடங்களில் தேர்ச்சி அடைந்திருந்தாலும் முக்கியப் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள்
  • அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள விரும்பியவர்கள்

இந்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெறும் எனவும் தனித் தேர்வர்களுக்கு, விண்ணப்பப் படிவங்களில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கும் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

தேர்வர்கள் results.cbse.nic.in மற்றும் digilocker.gov.in ஆகிய இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. 

தொடர்ந்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியாகின. இதில், 88.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இந்த துணைத் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.cbse.gov.in/