சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2026ஆம் ஆண்டிற்கான 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாவது பொதுத்தேர்வு கால அட்டவணையை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய அட்டவணையின்படி, தேர்வுகள் மே 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன.
எதற்காக இரண்டு பொதுத் தேர்வுகள்?
புதிய கல்விக் கொள்கையின்படி மாணவர்களின் தேர்வு சார்ந்த மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்திக்கொள்ள கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையிலும் பொதுத்தேர்வுகளை இரண்டு முறை எழுதும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாவது பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் காலை வேளையில் வழக்கமான நேரப்படியே நடைபெற உள்ளன.
மே 15 தொடங்கும் தேர்வுகள்
மே 15ஆம் தேதி தொடங்கும் இந்தத் தேர்வுகள், 21ஆம் தேதி அன்று முடிகின்றன. பாடவாரியான முழுமையான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் மாணவர்கள் நேரடியாகச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். கீழே புகைப்படமாகவும் தேர்வு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
அட்டவணையைப்பெறுவது எப்படி?
மாணவர்கள் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள '10-ஆம் வகுப்பு இரண்டாவது பொதுத்தேர்வு கால அட்டவணை 2026' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் திரையில் தோன்றும் பிடிஎஃப் ஆவணத்தை தரவிறக்கம் செய்து, எதிர்காலத் தேவைக்காகப் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதல் பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள்
- தங்களது செயல் திறனை மேலும் உயர்த்திக்கொள்ள விரும்பும் மாணவர்கள்
- முதல் தேர்வில் குறைந்தபட்சம் 3 தேர்வுகளை எழுதியவர்கள்
- கம்பார்ட்மெண்ட் பிரிவில் வைக்கப்பட்டவர்கள்
- 2025ஆம் ஆண்டு கம்பார்ட்மெண்ட் பிரிவில் வைக்கப்பட்டவர்கள்
- சிபிஎஸ்இ-ஆல் அனுமதிக்கப்பட்ட விளையாட்டு வீரர் மாணவர்கள்
ஆகியோருக்கு இந்த, இரண்டாம்கட்ட மே மாத பொதுத் தேர்வு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
இதற்கான ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த முழுமையான கூடுதல் வழிகாட்டுதல்களை சிபிஎஸ்இ வாரியம் விரைவில் அறிவிக்கும். மாணவர்கள் இப்போதிருந்தே இந்த அட்டவணைப்படி தங்களின் தேர்வுக்கான படிப்புகளைத் திட்டமிட்டுத் தொடங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.cbse.gov.in/cbsenew/documents/Date_Sheet_2nd_Board_Exam_X_2026_23042026.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.
