சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், நாடு முழுவதும் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஆண்டுதோறும் நடத்துகிறது.  இந்த நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகள், பரிக்‌ஷா சங்கம் இணைப்பு மூலம் தேர்வை எழுதும் தேர்வர்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டி உள்ளது. இதைச் சமர்ப்பிக்க அக்டோபர் 4ஆம் தேதி கடைசித் தேதி ஆகும்.


விண்ணப்பிக்க, தாமதக் கட்டணத்துடன் அக்டோபர் 5 முதல் 15 வரை முன்பதிவு செய்யலாம். இதற்கு ரூ.2,000 செலுத்த வேண்டும்.


பட்டியலை சமர்ப்பிப்பது எப்படி?


10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு படிவத்தைப் பூர்த்தி செய்து, பரீக்‌ஷா சங்கம் தளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். பள்ளிகள் தங்களின் அங்கீகார எண்ணை (‘Affiliation Number') யூசர் ஐடியாகப் பயன்படுத்த வேண்டும்.


தேர்வுக் கட்டணம் எவ்வளவு?


ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 பாடங்களுக்கு, இந்திய மாணவர்களுக்கு ரூ.1,500 தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். தொடர்ந்து கூடுதலாக ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.300 செலுத்த வேண்டும். இது 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருந்தும்.


நேபாள மாணவர்களுக்கு 5 பாடங்களுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக எழுதும் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.1 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.


இதுவே வெளிநாட்டு மாணவர்களுக்கு 5 பாடங்கள் பொதுத் தேர்வு எழுத ரூ.10 ஆயிரம் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதேபோல கூடுதலாக ஒவ்வொரு பாடத்துக்கும் 2 ஆயிரம் ரூபாயை அளிக்க வேண்டியது முக்கியம். 


செய்முறைத் தேர்வுக் கட்டணம் எவ்வளவு?


10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் இந்திய மாணவர்களுக்கு ஒவ்வொரு செய்முறைப் பாடத்துக்கும் ரூ.150 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேபாள மாணவர்களுக்கும் இது பொருந்தும். பிற வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒவ்வொரு செய்முறை பாடத்துக்கும் ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


2025ஆம் ஆண்டு 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு 2025, பிப்ரவரி 15ஆம் தேதி வாக்கில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மாணவர்கள் https://cbseacademic.nic.in/SQP_CLASSX_2024-25.html என்ற இணைப்பை க்ளிக் செய்து 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாளைப் பெறலாம். 


அதேபோல https://cbseacademic.nic.in/SQP_CLASSXII_2024-25.html என்ற இணைப்பில் பிளஸ் 2 மாதிரி வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


கூடுதல் விவரங்களுக்கு: https://cbseacademic.nic.in