மேலாண்மைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் CAT தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 14 பேர் 100% பெற்று தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பொறியியல் துறையினரே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு மாணவர், 100-க்கு 100 பர்சன்டைல் பெற்றுள்ளார். 


கேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டே, நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம். எனப்படும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில், மேலாண்மைப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. குறிப்பாக அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கொல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டணம் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 26ஆம் தேதி நடைபெற்றது. 


3 கட்டங்களாகத் தேர்வு


பொது நுழைவுத் தேர்வு தேர்வு 3 கட்டங்களாக நடைபெற்றது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் 3ஆம் கட்டத் தேர்வு மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற்றது. தேர்வுக்கு 3.28 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 2.88 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதாவது சுமார் 88 சதவீதம் அளவுக்கு வருகை பதிவானது. 


3 வகைமைகளில் கேட் தேர்வு நடைபெற்றது. வாய்மொழித் திறன் மற்றும் வாசிப்பு புரிதல் (VARC), தரவு விளக்கம் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் (DILR) மற்றும் அளவு திறன் (QA) ஆகியவற்றில் தேர்வு நடைபெற்றது.


தேர்வு முடிவுகள் வெளியீடு


முன்னதாக முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14 ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கேட் 2023-க்கான அனுமதிச் சீட்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியானது. 


இந்த நிலையில் கேட் தேர்வின் உத்தேச விடைக் குறிப்பு, டிசம்பர் முதல் வாரத்தில் வெளியான நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 




பொறியியல் பட்டதாரிகள் ஆதிக்கம்


இதில் 14 பேர் 100% பெற்று தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பொறியியல் துறையினரே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.  அதாவது 11 பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர். தமிழ்நாட்டில் இருந்து ஒரு மாணவர், 100-க்கு 100 பர்சன்டைல் பெற்றுள்ளார். 14 பேருமே ஆண்கள் ஆவர். 


இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் இருந்து 4 பேரும் தெலங்கானாவில் 2 பேரும் 100-க்கு 100 பர்சன்டைல் பெற்றுள்ளார். தமிழ்நாடு,  ஆந்திரா, டெல்லி, குஜராத், ஜம்மு, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒருவர் 100-க்கு 100 பர்சன்டைல் பெற்றுள்ளனர்.


இதேபோல, 1 பெண் உட்பட 29 தேர்வர்கள் 99.99 பர்சன்டைல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் உட்பட, 29 ஆண் தேர்வர்கள், 99.98 பர்சன்டைல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.


தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?



• மாணவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/756/84433/login.html என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


• அதில், தேர்வர்கள் தங்களின் தேர்வரின் எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். 


• அதில் தோன்றும் பக்கத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம்.