முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆண்டுக்கான கேட் 2026 (CAT 2026) நுழைவுத்தேர்வை இந்தூர் ஐஐஎம் கணினி வழியில் நடத்துகிறது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் தேர்வு நவம்பர் 29, 2026 அன்று இந்தியா முழுவதும் 170 நகரங்களில் மூன்று சுற்றுகளாக நடைபெற உள்ளது.
திருத்தங்கள் செய்ய வாய்ப்பு
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்ததும், விண்ணப்பங்களில் சிறு திருத்தங்களை மேற்கொள்ள குறுகிய காலத்திற்கு திருத்தச் சாளரம் திறக்கப்படும். குறிப்பிட்ட தேதிக்குள் முழுமையாகக் கட்டணம் செலுத்தி, வெற்றிகரமாகப் பதிவு செய்தவர்கள் மட்டுமே இதில் திருத்தங்கள் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி புகைப்படம், கையொப்பம் மற்றும் தேர்வு எழுத விரும்பும் நகரங்கள் ஆகியவற்றை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
முதலில் iimcat.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தின் வலதுபுறத்தில் உள்ள "New Candidate Registration" என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது திறக்கும் புதிய பக்கத்தில் பெயர், பிறந்த தேதி, நாடு மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
பிறகு "Generate OTP" என்பதை க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு ஓடிபி (OTP) வரும். அதை உள்ளிட்டு பதிவை உறுதி செய்யவும்.
அடிப்படைப் பதிவு முடிந்த பின்னர், கேண்டிடேட் போர்ட்டலில் (Candidate Portal) லாகின் செய்து விண்ணப்பப் படிவத்தில் தேவையான மற்ற அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
இறுதியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கும் நடைமுறையை முடிக்கலாம்.
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
விண்ணப்பதாரர்களின் பிரிவுகளுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். கட்டணத்தை யுபிஐ (UPI), கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
பொதுப் பிரிவினருக்கு (General Category) - ரூ. 2700
எஸ்சி / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு (SC/ST/PWD) - ரூ. 1350
எந்தவொரு பிழைகளையும் தவிர்ப்பதற்காக, விண்ணப்பத்தை இறுதி செய்து சமர்ப்பிக்கும் முன்பாக அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை கவனமாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: iimcat.ac.in
