2025ஆம் ஆண்டுக்கான கேட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான அனுமதி அட்டை நவம்பர் 12 அன்று வெளியிடப்பட உள்ளது. மேலாண்மைப் படிப்புகளுக்கு நடந்தப்படும் இந்த கேட் தேர்வு நவம்பர் 30 அன்று நடைபெறும்.
2025ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வை, இந்திய மேலாண்மைக் கழகம் கோழிக்கோடு (IIM Kozhikode) நடத்தும் நிலையில், நவம்பர் 12 அன்று அனுமதி அட்டைகள் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கேட் விண்ணப்ப உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ வலைத்தளமான iimcat.ac.in-ல் இருந்து தங்கள் ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்.
முன்னதாக இன்று (நவம்பர் 5ஆம் தேதி )அனுமதி அட்டைகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இது தள்ளிப்போய் உள்ளது.
3 லட்சம் பேர் தேர்வு எழுதுவர்
இந்த ஆண்டு, சுமார் 2.95 லட்சம் விண்ணப்பதாரர்கள் கேட் 2025 தேர்வை எழுத உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 1.07 லட்சம் பெண்கள் மற்றும் ஐந்து திருநங்கைகள் உட்பட 2.93 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர்.
தேர்வு எப்போது?
கேட் 2025 தேர்வு நவம்பர் 30 அன்று மூன்று அமர்வுகளாக, 120 நிமிட கால அளவில் நடத்தப்படும். தேவைப்பட்டால் தேர்வு தேதி மற்றும் நேரத்தை மாற்ற ஐஐஎம்களுக்கு உரிமை உண்டு என்று, IIM கோழிக்கோடு தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வு இந்திய மேலாண்மை நிறுவனங்களில் உள்ள பல்வேறு முதுகலை மற்றும் ஆய்வுத் திட்டங்களுக்கான சேர்க்கைக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு ஆகும். கேட் 2025 மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, ஐஐஎம் அல்லாத கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.
அத்தகைய நிறுவனங்களின் பட்டியல் கேட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. ஐஐஎம் அல்லாத நிறுவனங்களின் தேர்வுச் செயல்பாட்டில், அவை ஈடுபடுவதில்லை.
தேர்வு மையங்களின் விவரம்
இந்தத் தேர்வு சுமார் 170 தேர்வு நகரங்களில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பும்போது ஐந்து விருப்பமான தேர்வு நகரங்களைத் தேர்ந்தெடுக்கலாம். எனினும் தேர்வு மையங்களின் இறுதிப் பட்டியல், கேட் அதிகாரிகளின் விருப்பப்படி மாறலாம்.
தேர்வு முறை
வாய்மொழி திறன் மற்றும் வாசிப்புப் புரிதல் (VARC),
அளவுத் திறன் (QA),
தரவு விளக்கம் மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவு (DILR).
நவம்பர் 12 முதல் கேட் இணையதளத்தில் மாதிரி கேள்விகளுடன் மாதிரித் தேர்வு நடத்தப்படும் என்றும் ஐஐஎம் கோழிக்கோடு தெரிவித்துள்ளது.
மேலும் தகவல்களுக்கு தேர்வர்கள் iimcat.ac.in என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.