கார்கில் என்னும் அமெரிக்க நிறுவனம் சார்பில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் பி.எஸ். பட்டப்படிப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இந்த முன்முயற்சியின் மூலம், குறைந்த வருவாய் உடைய குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி. மெட்ராஸ்-ல் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் இளங்கலைப் பட்டம் பெற கார்கில் நிறுவனம் ஆதரவளிக்கும்.


கார்கில் (Cargill) என்ற அமெரிக்காவின் உலகளாவிய உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம், ஐ.ஐ.டி. மெட்ராஸ் உடன் இணைந்து ஐஐடி மெட்ராஸ்-ல் பி.எஸ்.டேட்டா சயின்ஸ் அப்ளிகேஷன்ஸ் படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு முழு உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.


100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை 


Merit-cum-Means கல்வி உதவித்தொகைக்கு தகுதியின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 7,500 புதிய மாணவர்களை சேர்க்கும் இத்திட்டத்தில், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உடைய 25% முதல் 30% பேரும் இடம்பெறுவார்கள். குறைந்த வருவாய்ப் பின்னணி கொண்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் உயர்கல்வி படிக்கும் தங்கள் கனவு நிறைவேற கார்கில்
உதவித்தொகை பேருதவியாக இருக்கும்.


ஐஐடி மெட்ராஸ் பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பை ஜூன் 2020-ல் அறிமுகப்படுத்தியது. இதுவரை 6 பருவங்களை நிறைவு செய்து தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.


சிறந்த ஆன்லைன் திட்டத்திற்கான QS-Wharton Reimagine கல்வி விருதுகளில் இத்திட்டத்திற்கு அண்மையில் வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 22,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ள நிலையில், 17,000 பேர் மும்முரமாகப் படித்து வருகின்றனர். 195 மாணவர்கள் பட்டப் படிப்பு அளவிலும், 4,500-க்கும் மேற்பட்டோர் டிப்ளமோ அளவிலும் உள்ளனர்.




சிறப்பம்சங்கள்


ஐஐடி மெட்ராஸ்-ன் பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பு தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட கல்வித் திட்டமாகும். மாணவர்கள் சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டம் பெறும் வகையில் பல்வேறு கட்டங்களில் நுழையவோ, வெளியேறவோ செய்யலாம். ஐஐடி மெட்ராஸ் பட்டப்படிப்புத் திட்டம் நான்கு நிலைகளைக் கொண்டது. டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் பிஎஸ் பட்டம் பெற
வேண்டுமெனில் மாணவர் ஒருவர் இந்த நான்கு நிலைகளையும் வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.


கற்பவர்களுக்கு நெகிழ்வுத் தன்மையை வழங்குவதுடன், மாணவர்கள் எதில் சாதிக்க விரும்புகிறார்களோ அதனைத் தேர்வு செய்யவும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. கடுமையான போட்டி நிறைந்த கூட்டு நுழைவுத் தேர்வில் (JEE) குறைவான விண்ணப்பதாரர்களே தகுதி பெறுகின்றனர். இதுபோன்று அல்லாமல் இத்திட்டம் மிகுந்த வெளிப்படையான, உள்ளடக்கிய தகுதிச் செயல்முறையைக் கொண்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கல்வி கற்போருக்கு ஐஐடியின் தரம் மிக்க கல்விக்கான வாய்ப்பு கிடைக்கிறது. பொருளாதார காரணங்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட அல்லது படிப்பைக் கைவிட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்திட்டம் மிகச் சிறந்த ஒன்றாகும்.