ஆடிட்டராக இந்தியாவில் நடத்தப்படும் பட்டயக் கணக்காளர் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 1 கடைசித் தேதி ஆகும்.
இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக விரும்பும் மாணவர்கள், ஐசிஏஐ எனப்படும் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழை வழங்கும்.
சிஏ தேர்வு முறை என்ன?
சிஏ தகுதித் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. குறிப்பாக முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination), இறுதித் தேர்வு (Final Examination) என்ற வரிசையில் நடக்கும். அதேநேரத்தில் பட்டப் படிப்பை முடித்தவர்கள், முதல்நிலைத் தேர்வை எழுதத் தேவையில்லை. இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது.
அதே நேரத்தில், ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர். முதல்நிலைத் தேர்வு மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு 4 தாள்களாக நடைபெறுகிறது. இதில் எழுத்து மற்றும் கொள்குறி வகையில் தேர்வு நடைபெற உள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி போதும்
இந்த நிலையில் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஐசிஏஐ அழைப்பு விடுத்துள்ளது. எனினும் தேர்வின்போது அவர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேடும். ஜனவரி 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் https://eservices.icai.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
- போதிய தகவல்களை உள்ளிட்டு, தேர்வர்கள் 9 ஆயிரம் ரூபாய் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
- விண்ணப்பித்த பிறகு, இந்த முன்பதிவு 3 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும்.
தேர்வு எப்போது? (CA Foundation 2025 exam schedule)
2025-ம் ஆண்டு மே மாதத்துக்கான சிஏ முதல்நிலைத் தேர்வுகள் மே 2ஆம் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வர்கள் icai.nic.in மற்றும் icaiexam.icai.org ஆகிய இணையதளங்களை அவ்வப்போது கண்டு, தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.