2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகையில் 99 % குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல மௌலானா ஆசாத் பெல்லோஷிப் நிதி ஒதுக்கீடும் சரிந்துள்ளது.

Continues below advertisement

2026- 2027ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டுக்கான முக்கியத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல கல்வித் துறையிலும் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள நிதிக்குறைப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான ‘மெரிட்-கம்-மீன்ஸ்’ (Merit-cum-Means) உதவித்தொகைத் திட்டம் கிட்டத்தட்ட முடங்கும் அபாயத்தில் உள்ளது.

Continues below advertisement

99% நிதிக்குறைப்பு

பொறியியல், மருத்துவம் போன்ற அதிக செலவாகும் படிப்புகளை மேற்கொள்ளும் ஏழை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் ‘மெரிட்-கம்-மீன்ஸ்’ திட்டத்திற்கு, 2025- 26ஆம் நிதியாண்டில் ரூ. 7.34 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் இது 99 சதவீதத்திற்கும் மேலாகக் குறைக்கப்பட்டு, வெறும் ரூ. 0.06 கோடியாக (ரூ. 6 லட்சம்) சுருங்கியுள்ளது. இது இத்திட்டம் கைவிடப்படுகிறதா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

மௌலானாஆசாத்பெல்லோஷிப்சரிவு

இதேபோல், எம்.பில்., பிஎச்.டி. உள்ளிட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் திட்டத்திற்கான நிதியும் சுமார் 16 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 42.84 கோடியாக இருந்த நிதி, தற்போது ரூ. 36.14 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆராய்ச்சி மாணவர்களுக்கு இது பெரும் பின்னடைவாக அமையும் என்று விமர்சிக்கப்படுகிறது.

நிர்வாகத்தோல்விகள்?

அதேபோல மாணவர்களுக்கு வழங்கப்படும் ப்ரீ-மெட்ரிக் மற்றும் போஸ்ட்-மெட்ரிக் உதவித் தொகைகளிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன. கடந்த பட்ஜெட்டில் போஸ்ட் மெட்ரிக் திட்டத்திற்கு ரூ. 413.99 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் செலவு வெறும் ரூ. 0.06 கோடியாகவே காட்டப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி மாணவர்களுக்கு முறையாகச் சென்று சேரவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று கல்வி செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிஎம்விகாஸ்திட்டம்

திறன் மேம்பாட்டுக்கான பிஎம் விகாஸ் திட்டத்திற்கு ரூ.303.27 கோடி என கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும், நேரடி கல்வி உதவித் தொகைக்கான நிதி குறைக்கப்படுவது மாணவர்களின் உயர் கல்வி கனவைச் சிதைக்கும் என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

மொத்தத்தில், 2026-27 பட்ஜெட்டில் சிறுபான்மையினருக்கான கல்வி அதிகாரமளித்தல் நிதி ரூ. 831.70 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், கடந்த காலச் செலவினங்களைக் கருத்தில் கொள்ளும்போது, இது மாணவர்களுக்கு உண்மையான பலனைத் தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.