இந்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் சமர்ப்பிக்கப்பட்டது. உள்ளடக்கிய மேம்பாடு, வளர்ச்சிக்கான கடைசி மைலை அடைவது, உள்கட்டமைப்பு முதலீடு, திறனை கட்டவிழ்த்துவிடுதல், பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி மற்றும் நிதித்துறை ஆகியவற்றை உள்ளடக்கி வளர்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்திய ரயில்வேக்கு புதிய உச்சமாக ரூ.2.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது.


இந்த நிலையில், தொடர்ந்து 8ஆவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அதில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பல்வேறு துறைகளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் தங்க இறக்குமதியில் வரி விதிப்பு அதிகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


இந்த நிலையில் கல்வித் துறையில் என்னென்ன எதிர்பார்ப்புகள் உள்ளன என்று பார்க்கலாம்.


கடந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 1.12 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதம் அதிகம் ஆகும். இந்த கூடுதல் முதலீடு திறன் இடைவெளியை ஈடுகடவும் டிஜிட்டல் கற்றலை விரிவுபடுத்தவும் தரமான கல்வியை அடைவதை மேம்படுத்தப்படும் உதவும் என்று நிபுண்ர்கள் கூறுகின்றனர்.


இந்த ஆண்டு எதிர்பார்ப்பு என்ன?


கல்வியாளர்களும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களும் STAM அடிப்படையிலான முதலீட்டுக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அதாவது அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கணிதம் சார்ந்த (Science, Technology, Arts, Mathematics) ஆராய்ச்சிகள், நுண்-நற்சான்றிதழ் படிப்புகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களுக்கான மேம்பட்ட நிதி உதவி செய்யப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வரி நிவாரணமும் முக்கியம்


குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களுக்கான கல்விச் செலவுகளில் வரி நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் விரும்புகின்றனர். அதேபோல பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கான நிதி அதிகரிப்பு மற்றும் சுகாதார மேலாண்மை கல்விக்கான ஆதரவு ஆகியவை மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதிகள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அரசு தரப்பில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு, அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.