மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர்களின் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Continues below advertisement

மனசாட்சி இருக்கிறதா முதல்வரே?

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக முதல்வர் நிரப்ப வேண்டும். தவெக ஆட்சிக்கு வந்தால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியளித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், உங்களுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 18,107 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புங்கள்.

Continues below advertisement

ஆசிரியர் தேர்வுகளில் வெற்றி பெற்று ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கையில், காலி  பணியிடங்களை உடனடியாக நிரப்புவதில் இந்த அரசுக்கு ஒரு சிக்கலும் இருக்க முடியாது. ஏற்கனவே பெரும்பாலான அரசு பள்ளிகளில் போதுமான கட்டுமான வசதிகளோ, கழிவறை வசதிகளோ இல்லாமல் மாணவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு தேவையான கல்வி அளிப்பதிலும் வஞ்சிப்பது என்பது மிகப் பெரிய துரோகம் என்பதனை உணர்ந்து இவ்விஷயத்தில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் பல்கலைக்கழகங்களில் தான் 67% பேராசிரியர் பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக வைக்கப்பட்டு தமிழக உயர்கல்வித்துறை படு பாதாளத்திற்கு சென்றுள்ளது. பள்ளி மாணவர்களின் அடிப்படைக்கல்வி உரிமையினையும் குழி தோண்டிப் புதைத்து விடாமல் உருப்படியாக அவர்களது கல்வியில் அக்கறை செலுத்துவதே முக்கியம் என தமிழக பாஜக திடமாகவும் தீர்மானமாகவும் வலியுறுத்துகிறது.  இந்த காலிப் பணியிடங்களில் 1,214 பள்ளிகளுக்குத் தலைமையாசிரியர்களே இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு ஆசிரியரே பல பாடங்களை எடுக்கும் அவலத்தால் ஏழை மாணவர்களின் கல்வித்தரம் அதளபாதாளத்திற்கு செல்கிறது. எனவே அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

Also Read: CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!

ஆசிரியர்களுக்கு தவெக அளித்த வாக்குறுதிகள்

கடந்த திமுக ஆட்சியில் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வது போன்ற விஷயங்களை செய்யாமல் விட்டதால் ஆசிரியர்கள் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டது. இதனால் மாணவ, மாணவியர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு ஆசிரியர்களுக்கு பல்வேறு விதமான அறிவிப்பை தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. அதன்படி 5 ஆண்டுகள் பணியை நிறைவு செய்திருந்தால் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும், அவர்களுக்குபொதுவான ஆசிரியர்களுக்கு இணையான சம ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். முறையான கால அட்டவணையுடன் கூடிய  ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகள் நடத்தப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனை நம்பி லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் வாக்குகளை தவெகவுக்கு செலுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பாக படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.