அனல் காற்று எதிரொலியாக பிஹாரில் பள்ளி நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஜூன் 30 வரை காலை 6.30 மணிக்கே வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. 

Continues below advertisement

சுட்டெரிக்கும் கோடை வெயில் மற்றும் கடுமையான அனல் காற்றின் தாக்கத்தில் இருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில், பிஹார் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான செயல்படும் நேரத்தை மாற்றி அம்மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த புதிய நேர அட்டவணை ஜூன் 30ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட பள்ளி நேரம்

Continues below advertisement

புதிய வழிகாட்டுதல்களின்படி, பள்ளிகள் வழக்கமான நேரத்திற்கு மாறாக காலை 6.30 மணிக்கே திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்படும். 7 மணி வரை பிரேயர் நடைபெறும். தொடர்ந்து 9 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

9.40 மணி வரை மதிய உணவு அளிக்கப்படும். 12.20 மணி வரை வகுப்புகள் நடைபெறும். வகுப்பறை ஆக்டிவிட்டிகள் 10 நிமிடங்கள் நடைபெற்று 12.30 மணிக்கு வகுப்புகள் முடியும். வெயிலின் உக்கிரம் அதிகரிக்கும் முன்பே மாணவர்களின் வகுப்புகளை முடித்துவிட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர், சரியாக 12.30 மணிக்கு மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

ஆசிரியர்களுக்கான விதிமுறைகள்


மாணவர்களுக்கு மதியம் 12.30 மணிக்கே பள்ளி முடிந்துவிட்டாலும், ஆசிரியர்கள் மற்றும் பிற பள்ளிப் பணியாளர்கள் மதியம் 1.30 மணி வரை கட்டாயம் பள்ளியிலேயே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மாணவர்களுக்கான வருகைப் பதிவேடு பராமரிப்பு, விடைத்தாள் திருத்துதல் மற்றும் அடுத்த நாளுக்கான பாடத்திட்டங்களை தயார் செய்தல் போன்ற அலுவலகப் பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மாற்றத்திற்கான காரணம்

பிஹாரில் கடந்த சில வாரங்களாகவே வெப்ப அலை மிகக் கடுமையாக வீசி வருகிறது. அதிக வெப்பம் காரணமாக பள்ளி செல்லும் குழந்தைகள் மயக்கமடைவது மற்றும் உடல்நலக் குறைபாடுகளுக்கு உள்ளாவது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனைக் கருத்தில் கொண்டே முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு இந்த உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும், இந்த புதிய நேரக் கட்டுப்பாடுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் கல்வித்துறை தனது சுற்றறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.