பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், இதற்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.


அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 41 கட்டிடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பி.ஆர்க். எனப்படும் இளங்கலை கட்டிடக்கலை படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கு அரசு ஒதுக்கீட்டில் 1,905 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவை ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.


இதை அடுத்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் மே 5 ஆம் தேதி கட்டிட அமைப்பியல் படிப்பில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கியது.  மாணவர்கள் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதைத் தொடர்ந்து டிஎஃப்சி எனும் அரசு சேவை உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 5 முதல் 8ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் ஆகஸ்ட் 12 மற்றும் 14-ல் சரிபார்க்கலாம்.


அதைத் தொடர்ந்து, 2023- 24ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 17 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குறிப்பாக மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு ஆகஸ்ட் 17 மற்றும் 18-ல் கலந்தாய்வு நடைபெறும். தொடர்ந்து சாய்ஸ் ஃபில்லிங் ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 


கலந்தாய்வு தேதிகள் குறித்த விரிவான அட்டவணையை https://static.tneaonline.org/docs/BArch_Tentativeschedule_2023.pdf?t=1690715693304 என்ற முகவரியில் காணலாம்.  


இளங்கலை கட்டிடக்கலை (B.Arch)-க்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023 (TNEA 2023) என்பது பதிவு செய்தல், பணம் செலுத்துதல், தேர்வு நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆன்லைன் செயல்முறையாகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் கலந்தாய்வு மற்றும் சேர்க்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு வழிமுறைகளை முழுமையாக படிக்க வேண்டியது முக்கியம். இணைய வழியில் நடைபெறும் கலந்தாய்வில் பங்குபெற ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். 


விண்ணப்பிப்பது எப்படி?


கட்டிட அமைப்பியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://barch.tneaonline.org/ என்ற இணைய முகவரி மூலமாக விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


இளங்கலை கட்டிடக்கலை குறித்து அரசு வெளியிட்ட முழுமையான கையேட்டைக் காண https://static.tneaonline.org/docs/BArch_instructions_2023.pdf?t=1690715693304 என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும். 


கூடுதல் விவரங்களுக்கு: https://barch.tneaonline.org/


தொலைபேசி எண்கள்: 0462- 2912081, 82, 83, 84 & 85
044-22351014
044-22351015


இ- மெயில் முகவரி: tneacare@gmail.com