விழுப்புரம் நீட் தேர்வர்கள் கவனத்திற்கு.. தேர்வு மையங்கள் மற்றும் பெற்றோர் வாகன நிறுத்தங்கள் முழு விவரம் உள்ளே!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG-2026) வருகின்ற 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

விழுப்புரம் : இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG-2026) வருகின்ற 21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இளநிலை மருத்துவம் படிப்பதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG-2026) முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவிக்கையில், இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG-2026) வருகின்ற 21.06.2026 ஞாயிறு அன்று நடைபெறவுள்ளதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் புனித இருதய ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி (மூன்று மையங்கள்), விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி (இரண்டு மையங்கள்), சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் விழுப்புரம் நகராட்சி கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி என 10 மையங்களில் நடைபெறவுள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 4,613 தேர்வர்கள் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG-2026) எழுதவுள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG-2026) வருகின்ற 21.06.2026 ஞாயிறு அன்று தேர்வு எழுதவுள்ள தேர்வர்களின் உடன் வரும் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் வசதிக்காக காத்திருப்போர் அறை (Parent's Waiting Area) மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் புனித இருதய ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுதவுள்ள தேர்வர்களின் பெற்றோர்கள் விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள MRICRC உயர்நிலைப்பள்ளியிலும்,
விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் தேர்வு எழுதவுள்ள தேர்வர்களின் பெற்றோர்கள் விழுப்புரம் சாலமேடு ஜேஜே நகரில் உள்ள இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்,
விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுதவுள்ள தேர்வர்களின் பெற்றோர்கள் விழுப்புரம் கோர்ட் ரோட்டில் உள்ள TELC நடுநிலைப்பள்ளியிலும், விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மூன்று மையங்களில் தேர்வு எழுதவுள்ள தேர்வர்களின் பெற்றோர்கள் விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும்,
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் உள்ள இரண்டு மையங்களில் தேர்வு எழுதவுள்ள தேர்வர்களின் பெற்றோர்கள் விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ள SKP (நித்தியானந்தா) மெட்ரிக் பள்ளியிலும், சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுதவுள்ள தேர்வர்களின் பெற்றோர்கள் சிந்தாமணி நாகூர் பப்ளிக் பள்ளியிலும் மற்றும் விழுப்புரம் நகராட்சி கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுதவுள்ள தேர்வர்களின் பெற்றோர்கள் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் சண்முகப்பெருமான் தெருவில் உள்ள புனித சேவியர் மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும், தேர்வு முடியும்வரை காத்திருப்போர் அறையினை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல வசதியாக சுழற்சி முறையில் பேருந்துகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் விழுப்புரம் நகராட்சி கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு செல்லுவதற்கு விழுப்புரம் மாதா கோவில் பேருந்து நிறுத்தத்திலிருந்தும், விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்திற்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும் சுழற்சி முறையில் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் மையங்களில் நகராட்சி பணியாளர்களை கொண்டு தூய்மையாக வைத்திருக்க வேண்டும், தேர்வர்கள் தேர்வு அறைக்கு செல்ல ஏதுவாக தகவல் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். தேர்வு மையங்களில் சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் தடையில்லா மின்சார வசதிகள் உள்ளிட்டவைகள் ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















