அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆளுநர் ரவி பங்கேற்கும் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்துகொண்டால்தான் வருகைப் பதிவு அளிக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இதற்கு துணை வேந்தர் வேல்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். 


விடுதலைப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா இன்று (ஜனவரி 23ஆம் தேதி) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.


1919ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான பேரைக் கொன்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. காந்தி , நேதாஜி போஸ் என்கிற இருபெரும் அரசியல் துருவங்களை உருவாக்கியது இந்த சம்பவம்தான்.


ஜெனரல் டயர் நடத்திய கொலைவெறியாட்டத்துக்குப் பிறகு முதன்முறையாகப் பஞ்சாப் சென்ற காந்தி, டயர் மற்றும் பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்யச் சொல்லி பிரிட்டிஷ் அரசுக்கு முறையிட்டார். ஆனால் நீதி கிடைக்கவில்லை. கிடைக்கப்பெறாத நீதி காந்தியை அகிம்சை வழியிலான ஒத்துழையாமையைக் கையில் எடுக்கச் செய்தது, நேதாஜி என்னும் சிவில் சர்விஸ் தேர்வு மாணவனை நேரெதிராக ஆயுதப் போராட்டத்தை நம்பச் செய்தது.


127ஆவது பிறந்தநாள் விழா


இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127ஆவது பிறந்தநாள் விழா இன்று (ஜனவரி 23ஆம் தேதி) நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலர் கவுரவிக்கப்பட்டனர். தியாகிகளின் குடும்பத்தினரும் விழாவில் கலந்துகொண்டனர். அண்ணா பல்கலை. விவேகானந்தர் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.


ஆளுநர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள இசிஇ, சிஎஸ்இ மற்றும் ஐ.டி. துறை மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவு செய்யவேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கிண்டி வளாக அண்ணா பல்கலைக்கழகத் முதல்வர் (CECG), சம்பந்தப்பட்ட துறை தலைவர்களுக்கு இதுதொடர்பாக சுற்றிக்கை அனுப்பி இருந்தார்.




கிளம்பிய சர்ச்சை


இளநிலை மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள் , ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் எனவும், அப்போதுதான் வருகை பதிவு எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.


இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நான்கு மணி நேர ஆய்வகப் பயிற்சி இருந்ததாகவும், அதைத் தவிர்த்து அவர்கள் விழாவில் பங்கேற்க வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இதற்குத் துணை வேந்தர் வேல்ராஜ் மறுப்புத் தெரிவித்துள்ளார். வருகைப் பதிவு கட்டாயம் ஆக்கப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.