இன்று சென்னையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், ''பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்குச் செல்ல வேண்டும்.

பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும். பாலியல் புகார்களைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாலியல் புகார்களை முறையாக விசாரிக்கத் தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வகையில் கருத்துக்களை பரப்பி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் செயல்பட வேண்டும்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

துன்புறுத்தல்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி அளவில் பிரச்சினைகள் வரும் போதே அதனை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.

மாவட்ட அளவிலேயே பள்ளிகளில் வரும் போக்சோ புகார்களை முன்னுரிமை கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படும். வேறு எங்கும் பணியாற்ற முடியாது.

ஆசிரியர் திட்டினால்கூட 14417 உதவி மைய எண்ணைத் தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போக்சோ புகார்கள் தொடர்பாக முதலமைச்சர் ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கச் சொல்லி இருக்கின்றார்.   மூன்று, நான்கு நாட்களில் வரைவு அறிக்கை வெளியிடப்படும்.  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அது அனுப்பப்படும்.

என்ன நிலையில் பாலியல் குற்றங்கள், குற்றச்சாட்டுகள்?

இதுவரை பாலியல்  நிலுவையில் 238 வழக்குகள் உள்ளன. 11 பேர் குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றார்கள். ஏழு பேர் இறந்திருக்கின்றார்கள். மார்ச் 10ஆம் தேதி 56 பேருக்குத் தீர்ப்பு வர உள்ளது.

எந்தெந்தப் புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் பயப்படத் தேவையில்லை.  உங்களுக்காக உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.