துணை வேந்தர் நியமனங்களில் தமிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.


உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று உயர் அதிகாரிகளுடன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். உயர் கல்வித்துறைச் செயலர் கார்த்தி, தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் வீரராகவ ராவ், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ், சிண்டிகேட் குழு உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்ட பலர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.


அண்ணா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து சுமார் 2 மணி நேரம் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:


’’ஆளுநருடன் எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லை. அரசியல் தவிர்த்து, நிர்வாக ரீதியாக ஆளுநர் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.


மாநில கல்விக் கொள்கை எப்போது?


முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறு நாள் (பிப்.7) தமிழகம் திரும்புகிறார். அவர் வந்ததும் மாநில கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அதற்குப் பிறகு முடிவு எடுக்கப்படும். மாநில கல்விக் கொள்கையை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்துவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. அதில் தாமதம் இருக்காது.   


காலியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை


காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவி இடங்களை உடனே நிரப்ப உள்ளோம்.


துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானிய குழுவைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என ஆளுநர் பரிந்துரைத்தாலும், தமிழக அரசின் முடிவே இறுதியானது.


தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்


துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும். அது நம்முடைய கடமை’’.


இவ்வாறு அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.


துணைவேந்தர் நியமனப் பின்னணி



தமிழ்நாட்டு உயர் கல்வித்துறையின்கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களின் தலைமைச் செயல் அலுவலர் என்று கருதப்படும் துணை வேந்தர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். 


துணை வேந்தரை நியமிக்க தமிழக அரசின் உயர்கல்வித் துறையால்தேடல் குழு (Search Committee) ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி, தமிழக அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிரதிநிதி என மூன்று பேர் இடம் பெறுவர். ஆளுநரின் பிரதிநிதி தேடல் குழுவின் தலைவராகச் செயல்படுவார். தேடல் குழு பரிந்துரை செய்யும் 3 நபர்களில் இருந்து ஒருவரைத் தமிழக ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். இந்த நடைமுறையின்படிதான் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர்.


இதற்கிடையே துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் பல்கலைக்கழக சட்ட மசோதா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காதது குறிப்பிடத்தக்கது.