Annamalai MBBS Seats: மூன்று மருத்துவ கல்லூரிகளுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைக்க திமுக திட்டமிட்டு செயல்பட்டதா? என விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

பறிபோகும் 650 மருத்துவ இடங்கள்:

ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி ஒன்றை குறிப்பிட்டு, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும்,  இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும். 

Continues below advertisement

3 மருத்துவ கல்லூரிகள் விவரம்:

நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்காக எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நிகர்நிலை அந்தஸ்து பெற்றது எப்படி?

ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும். இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்: TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்

திமுக கண்டுகொள்ளவில்லையா?

எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.  இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எதிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது” என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

உரிமையாளர்கள் யார்?

செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியானது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மற்றும் அவரது குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் குழுமம் கீழ் இயங்கும் மற்ற இரண்டு கல்லூரிகளும் திமுகவினருடன் நேரடி உறவில் இருக்கும் நபர்களின் கீழ் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.