பள்ளிக் கல்வித்துறையில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தாமதிக்காமல் உடனடியாக நிரப்ப நடவடிக்கை தேவை என்று, பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. காலியாக இருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு விட்ட பிறகும் கூட, பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் இவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏழை குழந்தைகளின் கல்வியை கடுமையாக பாதிக்கும். பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், ஒட்டுமொத்த ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14,248 என்றும், அவற்றில் கடந்த மே மாத கடைசி பணி நாள் நிலவரப்படி 96,141 ஆசிரியர்கள் பணியில் இருப்பதாகவும், மீதமுள்ள 18,107 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 7252 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 2833 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என்றும் மீதமுள்ளவை இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஆசிரியர் பணியிடங்கள் ரத்து?

உண்மையில் இப்போது காலியாக இருப்பதாக கூறப்படும் ஆசிரியர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். கடந்த பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள இடங்கள் மட்டுமே காலி பணியிடங்களாக அரசால் கணக்கு காட்டப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித்துறையால் அதிகாரப்பூர்வமாக கணக்கில் காட்டப்பட்டுள்ள காலியிடங்களின் எண்ணிக்கை, மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கையில் 15.85% ஆகும். தமிழக அரசின் கல்வித்துறையில் இரு முக்கியப் பிரிவுகள் உள்ளன. தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக்கல்வித் துறை ஆகியவை தான் அந்த இரு பிரிவுகள் ஆகும். பள்ளிக்கல்வித்துறையில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களைக் கொண்ட தொடக்கக் கல்வித்துறையில் குறைந்தது 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும். ஒட்டுமொத்தமாக 34,000 ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்துக் கொண்டு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? ஆண்டுக்கு 500 பேர் கூட நியமனமில்லை

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் நாளுக்கு நாள் குறைந்து வருவதற்கு காரணமே போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது தான். பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக் கல்வித்துறை ஆகிய இரண்டுக்கும் சேர்த்து 2013- 14ஆம் கல்வியாண்டுக்குப் பிறகு இப்போது வரையிலான 12 ஆண்டுகளில் 31,92 பட்டதாரி ஆசிரியர்களும், 2768 இடைநிலை ஆசிரியர்களும் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஆண்டுக்கு சராசரியாக 496 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5000 முதல் 6000 ஆசிரியர்கள் வரை ஓய்வு பெறுகின்றனர். 12 ஆண்டுகளில் குறைந்தது 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெற்றிருக்கக் கூடும் என்று கூறப்படும் நிலையில், 3,192 பட்டதாரி ஆசிரியர்கள், 2,768 இடைநிலை ஆசிரியர்கள், 5 கட்டங்களாக 11,420 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக 17,380 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 12 ஆண்டுகளாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை உயர்த்துவது எந்தக் காலத்திலும் சாத்தியமாகாது.

இலக்கு என்னவானது? ஒரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வியக்கும் வகையில் உயர்ந்து நின்ற தமிழ்நாட்டின் அரசு பள்ளிகள், இப்போது பிற மாநிலங்களுடன் போட்டியிட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் அரசு பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஆசிரியர்கள் போதிய எண்ணிக்கையில் நியமனம் செய்யப்படாததும் தான். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வேகமாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. நடப்பாண்டில் கூட அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை ஒன்றரை லட்சம் புதிய மாணவ, மாணவியரை சேர்க்க முடியவில்லை. சமூக மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசு பள்ளிகளால் தான் முடியும். அந்த ஒற்றை இலக்கை அடைவதற்காகவாவது அரசு பள்ளிகள் வலிமையுடன் திகழ வேண்டும். அதற்காக அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.