பொறியியல் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் 23ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசின் தனித்தனி கட்டுப்பாட்டு அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் கட்டுப்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டும் கல்லூரிகள் திறப்பு, கட்டணம் திருப்பி அளிப்பு, செமஸ்டர் தேர்வு தேதிகள் உள்ளிட்ட கல்லூரி செயல்பாடுகளுக்கான தேதிகளை, வருடாந்திர கால அட்டவணையாக ஏஐசிடிஇ வெளியிட்டு வருகிறது. அதன்படி 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான கால அட்டவணையை ஏஐசிடிஇ கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியிட்டது.
தேதியை நீட்டிக்கக் கோரிக்கை
அதில், காலியாக உள்ள இடங்களில் செப்டம்பர் 15-ம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்களைக் கல்லூரியில் சேர்க்கலாம். தொழில்நுட்பப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். அதேபோல பாலிடெக்னிக் முடித்து நேரடியாக பொறியியல் இரண்டாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கைக்கும் செப்டம்பர் 15-ம் தேதி கடைசித் தேதி ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் இந்தத் தேதி போதாது. நீட்டிக்க வேண்டும் என்று கல்லூரிகள் தெரிவித்தன.
இந்த நிலையில், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று கல்வியாண்டுக்கான கால அட்டவணையில் திருத்தம் செய்து ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.
அக்.23 வரை நீட்டிப்பு
அதன்படி, பொறியியல் கலந்தாய்வை முடித்து முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குவதற்கான அவகாசம் அக்டோபர் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நேரடி 2ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையையும் கல்லூரிகள் அக்டோபர் 23ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.
சில முதுகலைப் படிப்புகளுக்குப் பொருந்தாது
எனினும் இந்த அவகாச நீட்டிப்பு முதுகலை மேலாண்மை டிப்ளமோ மற்றும் முதுகலை மேலாண்மை சான்றிதழ் படிப்புக்குப் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://www.aicte-india.org/sites/default/files/Circular-Revised%20Calender-1.pdf என்ற இணைப்பில் திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு https://aicte-india.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.