முதுநிலை மாணவர்கள் மாதம் ரூ.12,400 பெறும் வகையில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஏஐசிடிஇ என்று அழைக்கப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் கேட் (GATE) அல்லது சிஇஇடி (SEED) நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகிய படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். முதுநிலை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் படிக்க வேண்டும்.
உதவித்தொகை பெறத் தகுதியான மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகை வழங்கப்படும். 2 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. மாணவர்கள் ஏதேனும் ஒரு தேசிய வங்கியில் சேமிப்புக் கணக்கை தொடங்கி, அதுகுறித்த விவரங்களை அளிக்க வேண்டும்.
யாரெல்லாம் பெற முடியாது?
முதுகலைப் படிப்புகளுக்கான உதவித்தொகையை, பகுதி நேரம், தொலைதூர அடிப்படையில் முதுநிலை படிப்பவர்கள் பெற முடியாது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (செப்.2) தொடங்கப்பட்டுள்ளது.
முக்கியத் தேதிகள்
கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற இணையதளம் வழியாக இன்று (செப்டம்பர் 2) முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். மேலும், மாணவர்களின் உதவித் தொகை குறித்த விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.
உதவித்தொகை, கால அளவு, விடுமுறை வரம்பு உள்ளிட்ட பல்வேறு வரம்புகளை https://aicte-india.org/sites/default/files/stdc/PG%20scheme%20guidelines%20(2023-24).pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.
மாணவர்களுக்கு தற்செயல் விடுப்பு ஆண்டுக்கு 2 வாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒரு மாதம் மருத்துவ விடுமுறையும் மகப்பேறு விடுமுறையும் விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.aicte-india.org/sites/default/files/Notification%202024-25.pdf