தொழிற்கல்வியைக் கட்டுப்படுத்தும் உயர் கல்வி அமைப்பான ஏஐசிடிஇயின் விதிமுறையால் 220 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் அண்மையில் 2022- 23ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி நிறுவனங்களுக்கான ஒப்புதல் பெறும் விதிமுறைகள் வெளியாகின. இதில் கல்வி நிலையங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை இருக்கும் பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகி வந்த நிலையில், அண்மைக் காலமாக மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. 2021-22ஆம் கல்வி ஆண்டில் ஓரளவு மாணவர் சேர்க்கை உயர்ந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளில், சுமார் 200 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவீதத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தனர்.
ஏஐசிடிஇயின் இந்த புதிய விதிமுறையால், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 220 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, கல்லூரியின் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையில், 50 சதவீதத்தைவிடக் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகள், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் உள்ளிட்ட புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்யவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அனுமதி மறுத்துள்ளது.
அதே நேரத்தில் காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், சைபர் பாதுகாப்பு, Internet of Things (IoT) உள்ளிட்ட புதிய பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பாரம்பரியமான பொறியியல் பிரிவு படிப்புகளான மெக்கானிக்கல், சிவில் ஆகியவை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் கடந்த ஆண்டு 300-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்க அனுமதி வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 220 ஆகக் குறைந்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் அறிவிப்பு கல்வியாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்