10,12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்கும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்த மே 8 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மே 19 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.  இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்க உள்ளார் என்ற செய்தி கடந்த சில வாரங்களாகவே வெளிவந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், “ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவருக்கு ஏழு பிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது!” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், “"தளபதி விஜய்" அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற (17-06-2023) சனிக்கிழமை அன்று "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த "பத்து மற்றும் பணிரெண்டாம்" வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" அவர்கள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.