பள்ளிகளில் ஆசிரியர்களிடம் அடாவடியாக நடந்துகொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எச்சரிக்கையாக அமையுமா அல்லது எதிர்மறை விளைவை ஏற்படுத்துமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களின் நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சிலர் ஆசிரியரையே தாக்க முயன்ற நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதற்குப் பெரும்பான்மை ஆசிரியர் சமூகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்த சூழலில் அமைச்சர் நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
என்ன அறிவிப்பு?
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (மே 9) நடைபெற்றது. இதில் பேசிய பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் தவறாக நடந்துகொள்வது குறித்து வேதனை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திய பிறகே, பாடங்கள் நடத்தப்படும். இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடையே கவனச் சிதறல்கள் அதிகரித்துள்ளன.
மன அழுத்தத்தில் இருந்து குழந்தைகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களைக் குறைகூறுவது தவறு. பள்ளிகள் - பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்குக் கூட்டுப்பொறுப்பு உள்ளது.
ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி), நன்னடத்தை சான்றிதழ் வழங்கும்போது, என்ன காரணத்துக்காக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கட்டாயம் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள்'' என்று அமைச்சர் எச்சரித்தார்.
இதற்கு ஆசிரியர்கள் மத்தியிலேயே ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் கிளம்பியுள்ளது. அதேநேரத்தில் கல்வியாளர்களும் குழந்தைநேயச் செயற்பாட்டாளர்களும் அமைச்சரின் அறிவிப்புக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்களும் கல்வியாளர்களும் சொல்வது என்ன? பார்க்கலாம்!
பிற்போக்குத்தனமாக சிந்திப்பது ஏன்?- அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி
ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாக, மன ரீதியாகத் தொந்தரவு தரும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தந்து அவர்களை வெளியேற்றி விட்டால் போதுமா? சம்பந்தப்பட்ட மாணவர்களின்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பள்ளியை விட்டு நீக்கி விட்டால் எல்லாம் சரியாகி விடுமா? இந்தத் தவறுகள் ஏன் நடக்கின்றன என ஆய்வு செய்தீர்களா ? பிற்போக்குத்தனமாக உங்களைச் சிந்திக்க வைப்பது எது? ஆசிரியர்களின் கதறலா? இல்லை அரசியல்வாதிகளின் குரல்களா?
நீங்கள் குறிப்பிடும் மாணவர்கள் உயர் பதவியில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் அல்ல. அன்றாடம் காய்ச்சிகளின் குழந்தைகள். பெரும்பாலும் முதல் தலைமுறைக் கல்வி வாய்ப்புக்குள் வந்திருக்கும் மாணவர்கள். அவர்களை வெளியேற்ற ஆரம்பித்தால் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளால் விளையும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் கல்வி கற்காமலேயே வெளியேறும் வாய்ப்புகள் உருவாகும்.
பள்ளிக் கல்வியின் பிரச்சினைகள்
இங்கு பள்ளிக் கல்வியில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. ஆசிரியர் நியமனம் இல்லை, காலியான வகுப்பறைகள், ஆசிரியர்கள் சிலரின் அறமற்ற போக்கு, கற்பித்தல் பணிகளில் சுணக்கம், பெற்றோரின் கவனிப்பின்மை, சமூக சூழல், ஆசிரியர்களிடையே ஒற்றுமை இன்மை, பள்ளிக் கல்வித்துறையின் இயலாமை, சரியான கற்பித்தல் முறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தாதது, மதிப்பீட்டு முறைகளில் தோல்வி, உரையாடல் இல்லாத வகுப்பறைகள், பயன்படுத்தப்படாத பள்ளி நூலகங்கள், போட்டித் தேர்வுகளை நோக்கி நகரும் பாடப் பொருள்கள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பதிவேடுகள் சார்ந்த பணி, பள்ளிக்குள் அரசியல்வாதிகளின் அத்துமீறல், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட இன்னும் ஏராளமான பிரச்சினைகளின் உள்ளடக்கமே மாணவர்களின் நடத்தை மாற்றங்களுக்குக் காரணம்.
அப்படிப் பார்த்தால் மேற்சொன்ன ஆசிரியர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் மாணவனுடன் சேர்த்து வெளியேற்றும் வேலையை அரசு செய்ய வேண்டி இருக்கும். ஆகவே முதலில் மாணவர்களை மாற்றுச் சான்றிதழை வைத்து அச்சுறுத்தாமல், துறையை உண்மையாகவே சீரமைக்கும் பணியை உரையாடல் வழியே மலரச் செய்யுங்கள்.
சிறைகள்கூட இதைச் செய்வதில்லை: அரசுப்பள்ளி ஆசிரியை புவனா கோபாலன்
குழந்தைகளின் உளவியல் சார்ந்து சிறப்புப் பயிற்சிகள், ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பேசி வரும் சூழலில் இதுபோன்ற அறிவிப்புகளை ஆசிரியர்கள் முற்றிலும் மறுதலிக்க வேண்டும்.
கல்வியின் நோக்கம் மனிதனைப் பண்படுத்துவதே. தவறு செய்யும் ஒரு மாணவர் அத்தவறைச் செய்ததற்காக மனம் வருந்தி, அதே தவறைச் செய்யும் வேறொருவருக்கு வழிகாட்டியாக மாறும் அளவிற்கு அந்த மாணவரை வளர்த்தெடுப்பதே பள்ளிகள். சிறைச்சாலைகள்கூட கைதிகள் திருந்தி வாழவே செயல்படுகின்றன. இந்நிலையில் நடவடிக்கை என்ற பெயரில் பள்ளியிலிருந்து மாணவர்களை வெளித்தள்ளும் செயல்கள், அவர்களின் ஆளுமையைச் சிதைத்து, சமூகச்சிக்கலை அதிகரிக்கும் நபராக மட்டுமே மாற்றக்கூடும்.
ஒழுங்கீன ஆசிரியர்களுக்கு என்ன தண்டனை?- குழந்தைநேயச் செயற்பாட்டாளர் தேவநேயன்
தவறான அறிவிப்பு இது. மாணவர்கள் தவறு செய்தால் அதைச் சரி செய்வதுதான் முறை. அதற்காக தண்டனை வழங்குவது சரியல்ல. இதனால் குழந்தைகள் பள்ளிகளில் இருந்து இடைவிலகல் ஆவார்கள். இப்படி விலக்கப்படும் குழந்தைகள்தான் பல்வேறு வன்முறைகளுக்கு ஆட்படுபவர்களாகவும் வன்முறையாளர்களாகவும் மாறுகிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவர்கள் விளிம்புநிலைக் குழந்தைகளே.
மேலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பல்வேறு விதமான ஒழுங்கீனங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது?. அவர்கள் அதே பள்ளியில் தொடரலாம், மாணவர்கள் மட்டும் தொடரக்கூடாது என்பது எப்படி சரியாகும். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது முழுமையாக நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் வன்முறை செய்தால் அரசாணை எண் 121, 2012-ன்படி அவர்கள் பணிநீக்கம் செய்யப் பட வேண்டும். மேலும் அவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் கேன்சல் செய்யப்படும். இந்த அரசாணை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
தயவு செய்து குழந்தைகளை குற்றவாளி ஆக்காதீர். நெறிப்படுத்துவோம். குழந்தைகளின் சிறந்த நலன் என்னும் அடிப்படையில் இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும்.
18ஆம் நூற்றாண்டுக்குச் செல்கிறோமா?- அரசுப்பள்ளி ஆசிரியர் மணி மாறன்
மிகவும் தவறான, மேலோட்டமான அறிவிப்பு. மாணவர்களின் தவறான நடத்தைக்கான காரணங்களை ஆராய முற்படாமல், அவனை நிரந்தரமாகப் பள்ளியைவிட்டு வெளியேற்றிடும் அறிவிப்பு இது. இத்தகைய அறிவிப்பின் மூலமாக வருங்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படும்.
21 நூற்றாண்டின் கற்றலை நோக்கி ஆசிரியர்களையும், மாணவர்களையும் நகர்த்திட வேண்டிய அரசு 18ஆம் நூற்றாண்டை நோக்கித் திருப்பி அழைக்கின்றதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
எதிர்காலத்தில் சமூக விரோதிகளாக மாறுவர்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு எச்சரிக்கையாக இருந்தால் வரவேற்கிறோம்.ஆனால் அதுவே நடவடிக்கையாக இருந்தால் மறுபரிசீலனை செய்யவேண்டும். மாணவர்களைக் குற்றவாளியாகச் சித்தரிப்பதால் இடைநிற்றல் அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சமூக விரோதிகளாக மாறிவிடும் அச்சம் உள்ளது.
வளரிளம் பருவத்தில் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இயல்பே. அது இப்போது அத்துமீறியிருப்பது வருத்தத்திற்குரியதே. குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமே அவர்களை ஹீரோவாகக் காட்டிக்கொள்ளத் தூண்டுகிறது. தற்போது கொரோனா காலகட்டத்தில் இது அதிகரித்துள்ளது.
இத்தகைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் மாற்றுச் சான்றிதழில் நடவடிக்கை குறித்து பதிவுசெய்யும் அறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளியில் படித்து, பொறியாளராகப் பணியாற்றும் கோபிநாத்
பள்ளிகளில் மாணவர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்ய உடற்கல்வி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும். அந்த ஆசிரியர்கள் ராணுவம் அல்லது காவல்துறையில் பணி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும். பள்ளிகளின் நுழைவாயிலில் வைத்து, அவர்களை ஒழுக்கமான தோற்றத்துடன் அனுப்ப வேண்டும். தேவைப்பட்டால் அடித்துத் திருத்தலாம். அரசு சான்றிதழ்களில் கை வைப்பதைத் தவிர்க்கலாம். இது வேறு ஏதேனும் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட நபர் படிப்பைத் தொடர வாய்ப்பாக இருக்கும்.
சரியான அறிவிப்பு: அரசுப் பள்ளி ஆசிரியர் சதிஷ்
சிலபேர் எதற்கெடுத்தாலும் குழந்தைகள் உளவியல் எனக் கண்மூடித்தனமாகப் பேசத் தொடங்கி விடுகின்றனர். ஆசிரியர்களைச் சுதந்திரமாக கற்பிக்கவிட்ட காலத்திலும், கண்டிக்க விட்ட காலத்திலும், எத்தனை பேரின் கை, கால்கள் முறிந்தன? எத்தனை பேரின் வாழ்க்கை வீணாய்ப் போனது? இன்றைக்குப் பணி நிலையில் உச்சத்தில் இருக்கும் அத்தனை பேரும் கண்டித்தலுடன் கல்வியைக் கடந்து வந்தவர்கள்தான்.
அமைச்சரின் இதுபோன்ற அறிவிப்புகள் மட்டுமே தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்னும் அச்சத்தை மாணவர்களுக்கு அளிக்கும். தவறான நடத்தை உடைய ஒரு மாணவனின் செயலால், சக மாணவர்களும் பாதிப்படையாமல் தடுக்கும்.
’விதிமுறைகளே விளையாட்டைக் காக்கின்றன’
மருத்துவரின் கத்தி எல்லோருக்கும் அறுவை சிகிச்சை செய்வதில்லை. நோயின் தன்மைக்கேற்பவே, அவர் தனது சிகிச்சையின் தன்மையைத் தீர்மானிக்கின்றார். விளையாட்டு மைதானத்தில் விதிமுறைகளே விளையாட்டின் ஆரோக்கியத்தைக் காக்கின்றன. விதிமுறைகளுக்குக் கட்டுப்படலையும், கீழ்ப்படிதலையும் கற்றுக் கொடுக்கின்றன.
விதிமுறைகளைக் குழந்தைகளுக்கு எதிரானதாக கருதுவது, எப்படி அறிவார்ந்த ஒன்றாக இருக்காதோ! அதுபோல அமைச்சரின் இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டும். ஆசிரியர்கள் பழிவாங்குவார்கள் என்பதெல்லாம் வறட்டு வாதம்.
அதேபோல நினைத்த மாத்திரத்தில் மாற்றுச் சான்றிதழில் எதனையும் எழுதிவிட முடியாது. தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்து முடிவு செய்தே சிலவற்றை மேற்கொள்ள முடியும். எந்தப் பள்ளியும் ஒரு மாணவனைப் பழி வாங்கச் செயல்படுவதில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்பிற்குரிய ஒன்றாகவே பார்க்கின்றேன்.
குழந்தை உரிமை, மாண்பிற்கு எதிரானது: அரசுப்பள்ளி ஆசிரியை சாந்த சீலா
18 வயது நிரம்பாத அனைவரும் சட்டப்படி குழந்தைகளே! குழந்தைகள் உரிமைகளை உறுதிப்படுத்துவது ஓர் அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும். ஒரு குழந்தையிடம் நடத்தைப் பிறழ்வைக் கண்டறிந்தால் அவர்களைத் தக்க ஆலோசனை, ஆய்வு மூலம் நெறிப்படுத்துவதே அனைவரின் கடமை.
கல்வியில் இருந்து வெளியே அனுப்பப்படும் குழந்தைகள், சமூகத்திற்கு எதிரியாய் மாறி நிற்பர். குழந்தை உளவியல் சார்ந்த பார்வை அரசாங்கத்திற்குத் தேவை. அதிலும் குறிப்பாக கல்வி தொடர்புடையவர்களுக்கு அத்தியாவசியமானது. கல்வி அமைச்சரின் இந்தப் பேச்சு குழந்தை உரிமை, மாண்பிற்கு எதிரானது. பெரும் அபத்தம். குழந்தைகள் நலன் கருதி அமைச்சர் தன் பேச்சைத் திரும்பப் பெறுவதே சமூக நலனாக அமையும்.
எடுத்தோம், கவிழ்த்தோம் எனச் செயல்பட முடியாது: கல்லூரி ஆசிரியை நந்தினி
அறிவிப்புக்கான முழு அறிக்கையும் படித்தால்தான் சில விசயங்கள் பிடிபடும். அரசு எப்போதும் மாணவர்கள் நலன் சார்ந்து இருப்பதாய்த்தான் தோன்றுகிறது.
அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஒழுக்க நடவடிக்கை என்பது வழக்கமான ஒன்றுதான். முதல்முறையாக ஒரு மாணவர் தவறிழைக்கும்போது, அவர்களுக்கு ஓர் அவகாசம் அளிக்கப்படும். சம்பந்தப்பட்டவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். அதற்குப் பிறகுதான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எடுத்தோம், கவிழ்த்தோம் என யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள். செய்யவும் முடியாது.
இவ்வாறு ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தெரிவித்தனர்.
சகிப்புத்தன்மை குறைந்து வரும் இளைய தலைமுறைக்கு மத்தியில், பள்ளிகள் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கற்றுக்கொடுக்கும் இடமாக இருக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் அந்தக் கண்டிப்பு, குழந்தைகளின் மாண்பையும் உரிமையையும் சிதைத்துவிடக் கூடாது என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.