தமிழ் விருப்பப் பாடம் பயின்ற மாற்றுத் திறனாளியான அப்துல்லா அஃப்ரித் யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே  வெற்றி பெற்றுள்ளார். கோவையைச் சேர்ந்த இவருக்கு வயது 25. அப்துல்லா அஃப்ரித், அகில இந்திய அளவில் 942ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் பெருமூளை வாதம், இயக்க சிக்கல்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பல உடல்நலச் சவால்களைக் கொண்டவர்.

Continues below advertisement

எனினும் "உடல் குறைபாடு என்பது ஒரு தடையல்ல; சரியான மனநிலை மற்றும் விடாமுயற்சி இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்" எனத் தனது வெற்றியின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார் அப்துல்லா அஃப்ரித்.

இவரது தந்தை அப்துல் அஸீம், நகைக் கடையில் பணிபுரியும் தினக்கூலித் தொழிலாளி ஆவார். வறுமையான பின்னணியில் இருந்து வந்தாலும், தனது மகனின் கனவுக்கு அவர் முழு ஆதரவை அளித்துள்ளார். மகனின் பார்வைக் குறைபாட்டைக் கருத்தில் கொண்டு, அவருக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும், குறிப்புகளையும் தந்தையே வாசித்துக் காட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.

Continues below advertisement

நாளொன்றுக்கு 14 மணி நேரம் படிப்பு

பார்வைக் குறைபாடு காரணமாக ஆடியோ வடிவிலான பாடங்களைக் கேட்டுப் படித்த அப்துல்லா, சென்னையைச் சேர்ந்த தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையம் வழங்கிய இலவச தங்குமிட வசதி மற்றும் பயிற்சியின் உதவியுடன் தேர்வுக்குத் தயாரானார். ஆரம்பத்தில் தினந்தோறும் சுமார் 9 மணி நேரமும் முதன்மைத் தேர்வின் போது நாளொன்றுக்கு 14 மணி நேரம் வரையும் அப்துல்லா கடுமையாகப் படித்துள்ளார்.

மேலும், தன்னுடைய கருத்துகளைச் சிறப்பாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இத்தேர்வைத் தமிழ் வழியிலேயே எழுதி வெற்றி கண்டுள்ளார்.

சமூகத்தில் உண்மையான மாற்றம்

ஐஏஎஸ் அல்லது ஐஆர்எஸ் அதிகாரியாகப் பணிபுரிய வாய்ப்புள்ளதாகக் கூறும் அப்துல்லா, "மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளில் இருக்க வேண்டும்; அப்போதுதான் சமூகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்க முடியும்" என்று தெரிவித்தார்.

"நாங்கள் ஊனமுற்றவர்கள் அல்ல, தனித்திறன் கொண்டவர்கள்" என்று கூறும் அப்துல்லா அப்ரித்தின் இந்த வெற்றிப் பயணம், சவால்களைக் கண்டு துவண்டு போகும் பல இளைஞர்களுக்கு ஒரு மிகச்சிறந்த உந்துசக்தியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.