நான் முதல்வன் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 29 கோரிக்கைகள் பொதுக் கல்வி பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.


பொதுக் கல்வி அமைப்பை பாதுகாக்கக் கோரி, அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் (AISEC) தமிழ்நாடு மாநில அமைப்பு சார்பில் பொதுக் கல்வி பாதுகாப்பு மாநில மாநாடு நடைபெற்றது. மக்களின் அடிப்படைக் கல்வி உரிமையை பாதுகாக்கக் கோரி நடைபெற்ற இம்மாநாட்டில் உமா மகேஸ்வரி, AISEC, தமிழ்நாடு மாநிலத் தயாரிப்புகுழு உறுப்பினர் தலைமை தாங்கினார்.  


மாநாட்டில் பேரா அ.கருணானந்தன், மேனாள் துறைத் தலைவர், வரலாற்றுத்துறை விவேகானந்தா கல்லூரி, பேரா லெ.ஜவகர் நேசன், மேனாள் துணை வேந்தர், ஜே எஸ் எஸ் பல்கலைக்கழகம், பேரா ப.சிவக்குமார், மேனாள் முதல்வர், குடியாத்தம் அரசு கல்லூரி, பேரா. பிரான்சிஸ் கலோத்துங்கல், AISEC, அகில இந்திய செயற்குழு உறுப்பினர், கேரளா ஆகியோர் சிறப்புரையாற்றினர். 


மாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றம்?



  1. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.

  2. தொடக்கக் கல்விலிருந்து உயர்கல்வி வரை தாய்மொழியில் போதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு மொழி கொள்கையை தொடக்கக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை பின்பற்ற வேண்டும்.

  3. அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வழியாக தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யும் வழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

  4. கழிப்பறை வசதிகள், வகுப்பறை வசதிகள், ஆய்வக வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அனைத்துப் பள்ளிகளிலும் மேம்படுத்த வேண்டும்.

  5. தூய்மைப் பணியாளர்களை பள்ளிகளுக்கு நிரந்தரமாக நியமிக்க வேண்டும்.


கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள் போதும்



  1. பள்ளிகளில் தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து முனைப்பு காட்டுவதை நிறுத்த வேண்டும். இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், ஆன்லைன் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்கு தயாரிப்பு, எமிஸ் அப்டேட்ஸ், வானவில் மன்ற செயல்பாடுகள், நான் முதல்வன் திட்டச் செயல்பாடுகள் போன்றவற்றை நிறுத்தி பள்ளிக்குள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை ஆசிரியர்கள் சுதந்திரமாக மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

  2. கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மொத்த மாணவர்களில் 25% எண்ணிக்கை உள்ளவர்கள் அரசின் நிதியுதவியுடன் படிக்கும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கு செலவிடும் தொகையை அரசுப் பள்ளிகளுக்கே செலவு செய்து அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.

  3. முப்பருவக் கல்வி முறையை மாற்றி வருடம் முழுவதும் படிக்கும் ஒரே பருவ முறையைக் கொண்டு வர வேண்டும். பள்ளிக் கல்விக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிகளை வருடந்தோறும் பராமரிப்புச் செய்யவும் மற்ற தேவைகளை நிறைவு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆங்கிலவழி வகுப்புகள் மற்றும் தமிழ் வழி வகுப்புகள் இரண்டிலும் தனித்தனியாக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்பிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும்.

  4. ஆங்கில வழிக் கல்வியை தருவதற்கு தனியாக ஆங்கிலவழியில் பயின்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

  5. கற்றல் - கற்பித்தல் சாராத பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்.

  6. அனைத்துவகையான பள்ளிகளிலும் விளையாட்டு மைதானம் உருவாக்க வேண்டும். அதே போல் அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் கட்டாயம் வேண்டும்.

  7. ஓராசிரியர் பள்ளிகளை மாற்றி, வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

  8. ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை 1:20 என்ற விகித அடிப்படையில் மாற்ற வேண்டும்.

  9. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் உள்பட பகுதி நேர ஆசிரியர்கள் வரை அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

  10. தனியார் பள்ளிகள் / கல்லூரிகளில் கட்டணக் கொள்ளையை தடுத்து ஏழை மாணவர்கள் படிக்கும் வகையில் கல்வி கட்டணங்கள் நிர்ணயிக்க கல்வியாளர்கள், பெற்றோர்கள் கொண்ட ஜனநாயக குழுவை ஏற்படுத்தவேண்டும். கட்டணங்கள் அனைத்தும் இணைய வழியாகவே செலுத்தப்பட வேண்டும்.

  11. தனியார் பள்ளிகள் / கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்களாக நியமனம் செய்ய வேண்டும். அங்கு ஆசிரியர்களது ஊதியம் அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

  12. மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்பில் செல்லும் ஆசிரியர்களின் பணியிடங்களுக்குத் தற்காலிகமாக மாற்று ஆசிரியர்களை நியமித்து கற்றல் கற்பித்தலில் தடங்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

  13. பள்ளிகளுக்கு மனநல ஆலோசகர் நியமனம் செய்யப் படவேண்டும்.

  14. குழந்தைகளின் பாடச் சுமைகள் குறைக்கப்பட வேண்டும்.

  15. மதிப்பெண் சார்ந்த கல்வி முறைக்கு அதிக முக்கியத்துவம் தருவதை விட்டு விலகி, உயர்ந்த நீதிநெறி, மனித நேயம், சமூகப் பார்வை ஆகியவற்றைத் தரும் கல்வி முறையைப் பள்ளிகளில் அறிமுகம் செய்ய வேண்டும்.

  16. உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நூலகர் என்ற பதவியில் தனியாக நியமனம் செய்ய வேண்டும். நூலகங்கள் பெயருக்கு இயங்காமல் ஆக்கபூர்வமாக பயனளிக்க வேண்டும்.

  17. தேசியக் கல்விக் கொள்கை 2020 வலியுறுத்தும் மாதிரிப் பள்ளிகள் முறையை ஒழித்து அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சமமான கல்வியைத் தர அரசு முன் வர வேண்டும்.

  18. அரசு பல்கலைக்கழகங்கள், அரசு/ அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரந்திர அடிப்படையில் நிரப்பப்படவேண்டும். அரசு கல்வி நிறுவனங்களுக்குப் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும்.

  19. தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொதுப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

  20. கல்லூரி பாடங்களை தனியாருக்கு தாரை வார்த்து கல்வியை சீரழிக்கும், ஊழலுக்கு வழிவகுக்கும் “நான் முதல்வன் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.

  21. தேசிய கல்விக் கொள்கை 2020ல் ஒன்றிய அரசால் வடிவமைக்கப்பட்டு அமல்படுத்த முனையும் கிரெடிட் வங்கி பாடத்திட்டம் (Academic Bank of Credit - ABC) திட்டத்தை கைவிட வேண்டும்.

  22. செனட், சிண்டிகேட் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழுக்களில் ஜனநாயக முறையில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த வேண்டும்.

  23. அரசு / அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் அனைத்துக் கட்டுமான வசதிகளுக்கும் போதுமான நிதி ஒதுக்கி அவை சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.

  24. கல்வியை தனியார் மயம், வியாபார மயம், மத்திய மயம், மத மயமாக்கும் தேசிய கல்வி கொள்கை 2020யை முற்றிலுமாகத் திரும்பப்பெற வேண்டும். மதச்சார்பற்ற, ஜனநாயகபூர்வ, அறிவியல்பூர்வ கல்வியை அனைவருக்கும் வழங்கும் மக்களுக்கான மாற்று கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்''.


இவ்வாறு அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டியின் தமிழ்நாடு மாநிலக் குழு தெரிவித்துள்ளது.