குழந்தைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பிய மற்றும் அனுப்பும் பெற்றோர்களில் 78 சதவீதம் பேர், தங்களது பணி ஓய்வுக்கு பிறகு தேவைப்படும் பணத்தை சேமித்து வைப்பது இல்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.


குழந்தைகளின் கல்வியே முக்கியம்


எச்எஸ்பிசி வங்கி ( HSBC ) அண்மையில் 11 ஆயிரம் பெற்றோர்களைக் கொண்டு ஆய்வொன்றை நடத்தியது. அந்த ஆய்வு முடிவுகள் Quality of Life Report 2024 என்ற பெயரில் வெளியாகி உள்ளன. அதில், வெளிநாட்டிற்குத் தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்பிய மற்றும் அனுப்ப உள்ள பெற்றோர்களில் சுமார் 78 சதவீதம் பேர், பணி ஓய்வுக்கு பிறகு தேவைப்படும் பணத்தை சேமித்து வைப்பது இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதற்கான திட்டமிடலை விட குழந்தைகளின் கல்வியே முக்கியம் என பெற்றோர்கள் கருதுகின்றனர். 


கடந்த சில காலங்களுக்கு முன்பு வரை, உயர் தட்டு வர்க்கத்தினரும் படித்தவர்களும் மட்டுமே தங்களின் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைத்தனர். இந்த நிலை தற்போது மாறி வருகிறது. தங்கள் குழந்தைகள் வெளிநாட்டில் தரமான கல்வி பெற வேண்டும் என்று நிறையப் பெற்றோர்கள் விரும்புகின்றனர். வெளிநாட்டில் படிக்க ஆசைப்படும் பிள்ளைகளின் கனவையும் பெற்றோர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.


எந்த நாடுகளுக்குச் செல்ல ஆர்வம்?


பொதுவாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று படிப்பதை இந்திய மாணவர்கள் விரும்புகின்றனர்.  


வெளிநாடுகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் இந்தியப் பெற்றோர்களில் 53 சதவீதம் பேர், கல்விக்காக ஏற்கெனவே சேமிப்புத் திட்டத்தை வைத்திருக்கின்றனர். 40 சதவீதம் பேர் மாணவர்கள் கல்விக் கடன் வாங்கிப் படிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.


நிதிப் பிரச்சினை மட்டுமில்லை


51 சதவீதம் பேர் கல்வி உதவித்தொகையை நம்பி இருக்கின்றனர். 27 சதவீதப் பெற்றோர்கள் தங்களின் சொத்துகளை விற்று, படிக்க வைக்கத் தயாராக இருக்கின்றனர். நிதித் தேவைகளோடு படிப்பைத் தேர்வு செய்வது, பல்கலைக்கழக சேர்க்கை, தங்கும் வசதி ஆகியவையும் முக்கியப் பிரச்சினைகளாக இருக்கின்றன.  


இதை அடுத்து, இந்த அறிக்கையில் இந்தியர்களின் நிதிக் கவலைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், பணவீ க்கம் மற்றும் சுகாதாரச் செலவுகள் ஆகியவை முதன்மையான கவலைகளாக இருக்கின்றன.


ஆய்வில் பதிலளித்தவர்களில் சுமார் 45% பேர் தங்கள் குடும்பப் பராமரிப்பை முதன்மை இலக்காக வைத்துள்ளனர். அதே நேரத்தில் 41% பேர் தங்கள் எதிர்காலத்திற்கான செல்வத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினர், மேலும் 38% பேர் ஓய்வூதியத்திற்கான திட்டத்தை முன்னிலைப்படுத்தினர். அதேபோல 58% பேர் ஓய்வுக்குப் பிறகும் பணியைத் தொடரத் திட்டமிட்டுள்ளனர்.


வெளிநாடுகளில் 2025ஆம் ஆண்டு 20 லட்சம் இந்திய மாணவர்கள் படிப்பார்கள் என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.