இந்தியாவில் சுமார் 8,000 பள்ளிகள் மாணவர் சேர்க்கையே இல்லாமல் இயங்கி வருவதாகவும், அங்கு 20,000 ஆசிரியர்கள் பணிபுரிவதாகவும் மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20,817 ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இதில் மேற்கு வங்கத்தில் அதிகபட்ச பள்ளிகள் உள்ளன. அங்கு 3,812 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 17,965 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

Continues below advertisement

கல்வி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2023-24 ஆம் ஆண்டில் 7,993 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 5,000 பள்ளிகள் குறைவு ஆகும். (2022-23 இல் 12,954 பள்ளிகள்)

அடுத்தடுத்த இடங்களில் யார்?

இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் தெலங்கானாவில் (2,245) உள்ளன, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (463) உள்ளது. தெலங்கானாவில் இந்தப் பள்ளிகளில் 1,016 ஆசிரியர்களும், மத்தியப் பிரதேசத்தில் 223 ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர்.

Continues below advertisement

உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்று 81 பள்ளிகள் உள்ளன. கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை பூஜ்ஜியமாகப் பதிவுசெய்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரப் பிரதேச மத்யமிக் சிக்ஷா பரிஷத் (UP வாரியம்) தயாராகி வருகிறது.

எங்கெல்லாம் இல்லை?

இதற்கிடையில், ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, அசாம், இமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற பள்ளிகள் எதுவும் இல்லை.

அதேபோல புதுச்சேரி, லட்சத்தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், டாமன் மற்றும் டையூ, சண்டிகர் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் டெல்லியிலும் மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகள் எதுவும் இல்லை.

இதுகுறித்து மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "பள்ளிக் கல்வி என்பது மாநிலப் பட்டியல் என்பதால், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளின் பிரச்சினையைத் தீர்க்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் போன்ற வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த சில பள்ளிகளை இணைத்துள்ளன" என்று தெரிவித்தார்.

ஒற்றை ஆசிரியர் பள்ளிகள்

நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் 33 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். ஆந்திரப் பிரதேசம் அதிக எண்ணிக்கையிலான ஒற்றை ஆசிரியர் பள்ளிகளைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் உள்ளன.

இருப்பினும், ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளன.

ஒற்றை ஆசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை 2022-23 இல் 1,18,190 ஆக இருந்தது, அது 2023-24 இல் 1,10,971 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.