கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் அரியர் தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் தோல்வியடைந்ததை அடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் சரியாக பதிலளிக்காவிட்டால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் இளங்கலை பாடப் பிரிவில் 10 பட்டப் படிப்புகள் உள்ளன. பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், 14 உறுப்புக் கல்லூரிகள், 29 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. 


இதற்கிடையே கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டு மற்றும் 2019-20 ஆம் கல்வியாண்டு மாணவர்களில், செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக அரியர் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் முறையில் எழுத்துத் தேர்வும், நேரடி முறையில் செய்முறைத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுகளை எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகளை வேளாண்மைப் பல்கலைக்கழகம் டிசம்பர் 2-ம் தேதி வெளியிட்டது.


இதில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வியடைந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களில் சுமார் 50 பேர் நேற்று பல்கலைக்கழகத்துக்கு வந்தனர். பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நினைவுக் கட்டிடத்தின் முன்பு அமர்ந்து கோஷமிட்டனர். போராட்டத்திலும் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து அங்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் இந்தப் போராட்டத்துக்கு இதுவரை முடிவு எட்டப்படவில்லை.




இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தரப்பில் கூறும்போது, ‘‘அரியர் தேர்வில் வேண்டுமென்றே எங்களை பெயில் ஆக்கியுள்ளனர். தேர்வில் எப்படி 80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் இருக்க முடியும்?


மதிப்பெண் சான்றிதழில் முறையாக விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. மாணவர்களின் பெயர் இருக்குமிடத்தில் இந்திய ஸ்டேட் வங்கியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஆன்லைன் தேர்வு எழுதும்போது, ஏதாவது ஒரு மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டால் பீப் ஒலி எழுப்பப்படும். மூன்று முறை பீப் ஒலி வந்தால்தான், முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கருதப்படும். ஆனால் எங்களுக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. 


ஒரே நாளில் அதிகபட்சமாக 4 அரியர் தேர்வுகள் கூட நடத்தப்படுகின்றன. 4 தேர்வுகளை ஒரே நாளில் எப்படி எழுதுவது? இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். 


விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டால், அதற்கான பதில் பல்கலைக்கழகத்திடம் இருந்து வரத் தாமதமாகிறது. அடுத்த அரியர் தேர்வின்போதே மறுமதிப்பீடு முடிவுகள் வெளியாகின்றன. இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் எங்களின் தேர்வுத் தாள்களை மீண்டும் மதிப்பீடு செய்து, சரியான மதிப்பெண்களை வழங்க வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தை நடத்த முடிவு எடுத்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விசாரிக்க, அதன் செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, அவர் அழைப்பை எடுக்கவில்லை.