தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் நிலையில் ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டு வருவதால் பள்ளிகளில் மற்ற வகுப்புகள் அரைநாள் மட்டுமே நடைபெற்று வருகிறது.
பொதுத்தேர்வுகள்
கடந்த மார்ச் 13 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் இந்த தேர்வுகள் நேற்று முடிவடைந்தது. 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் இந்த தேர்வு நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள்
இதற்கிடையில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. வெயில் காலம் நெருங்குவதால் முன்கூட்டியே தேர்வுகளை முடிக்க வேண்டும் என அரசுக்கு பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் 6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதியை தனித்தனியாக வெளியிட்டுள்ளனர். எனவே மாணவர்கள் கவனமுடன் தங்கள் மாவட்டத்திற்கான தேர்வு தேதிகளை பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ், 24 ஆம் தேதி ஆங்கிலம், 25 ஆம் தேதி கணிதம், 26 ஆம் தேதி அறிவியல், 27 ஆம் தேதி உடற்கல்வி, 28 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையும், 7 ஆம் வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் 4 மணி வரையும், 8 ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் 12 மணி வரையும், 9 ஆம் வகுப்புக்கு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வுகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.