தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கொள்கை விளக்கக் குறிப்பை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


6 புதிய படிப்புகள்


அச்சு தொழில்நுட்பம்‌, வேதியியல்‌ தொழில்நுட்பம்‌, தோல்‌ தொழில்நுட்பம்‌, நெசவு தொழில்நுட்பம்‌ ஆகிய 4 சிறப்பு பயிலகங்களில்‌ புதிதாக வளர்ந்து வரும்‌ தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 6 புதிய பட்டயப்‌ படிப்புகள்‌ அறிமுகப்படுத்தப்படும்‌. (Introduction of New Emerging Diploma Courses in 4 Special Institutes of Printing Technology, Textile Technology, Chemical Technology and Leather Technology)




தொழில்நுட்பக்‌ கல்வி இயக்ககத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ சிறப்பு பயிலகங்களை மேம்படுத்தவும்‌, மாணாக்கர்கள்‌ சேர்க்கையை உயர்த்தவும்‌, நவீன தொழில்நுட்பங்களை வழங்கவும்‌, 2025-26 கல்வியாண்டு முதல்‌ அண்ணா பல்கலைக்கழகம்‌ உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுடன்‌ இணைந்து, 4 சிறப்பு பயிலகங்களில்‌ பின்வரும்‌ புதிய பட்டயப்‌ படிப்புகள்‌ அறிமுகப்படுத்தப்படும்‌ என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


ஆண்கள் விடுதிக் கட்டடம், மாணவிகளுக்கென தனி ஓய்வறை 


இதுதவிர்த்து கோயம்புத்தூர், ஈரோடு கல்லூரிகளிலும் சென்னை மைய பாலிடெக்னிக் வளாகத்திலும் அரசு ஆண்கள் விடுதிக் கட்டடம் கட்டப்படும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு கலை, அறிவியல்‌ மற்றும்‌ கல்வியியல்‌ கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவிகளுக்கென தனி ஓய்வறை ஒன்று தலா ரூ.5.00 இலட்சம்‌ வீதம்‌, 171 அரசு கல்லூரிகளில்‌ ரூ.8.55 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்படும்‌  என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


இந்தியா மற்றும்‌ வெளிநாடுகளில்‌ பொறியியல்‌ பட்டதாரிகளின்‌ முதுகலை படிப்பை ஊக்குவிக்கவும்‌, அவர்களின்‌ வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தவும்‌, ஒரு மாணாக்கருக்கு ரூ.8,500,- வீதம்‌ ரூ.42.50 இலட்சம்‌ செலவில்‌ 500 மாணாக்கர்களுக்கு GATE, IES, CAT, GMAT, GRE, IELTS, TOEFL போன்ற போட்டித்‌ தேர்வுகளுக்குத் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


போட்டித்‌ தேர்வுகளுக்கு பயிற்சி


மாணாக்கர்களிடையே ஏற்பட்‌டுள்ள வரவேற்பின்‌ அடிப்படையில்‌, போட்டித்‌ தேர்வுகளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணாக்கர்களின்‌ எண்ணிக்கை 500-ல் இருந்து 1400-ஆக உயர்த்தப்படும்‌. இதற்காக கூடுதலாக ரூ.77.00 இலட்சம்‌ தொடர்‌ செலவினமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌.


அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல்‌ ஆய்வகம்‌


கோயம்புத்தூர்‌, சேலம் மற்றும் பர்கூர்‌ ஆகிய இடங்களில்‌ உள்ள 3 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரனியல்‌ ஆய்வகம்‌, ரூ.3.00 கோடி மதிப்பீட்டில்‌ நிறுவப்படும்‌ என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.