மத்திய அரசைப் பின்பற்றி, 5, 8ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் பெரும்பாலும் சிபிஎஸ்இ கல்வி முறை பின்பற்றப்படுவதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’புதுச்சேரி யூனியன் பிரதேசம் மத்திய அரசின் கீழ் உள்ளதால் எந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதோ அதன்படி இங்கு செயல்படுத்தப்படும். மத்திய அரசின் நடைமுறையே புதுச்சேரி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்படும். தனியார் பள்ளிகளும் இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும்’’ என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


பின்னணி என்ன?


நாடு முழுவதும் அனைத்துப்‌ பள்ளிக்‌ குழந்தைகளும்‌ தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம்‌ வகுப்பு வரை கட்டாயத்‌ தேர்ச்சி வழங்கப்படும்‌ முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்‌, கல்வி உரிமைச்‌ சட்டத்தின்‌ விதிகளைத்‌ திருத்தம்‌ செய்து, ஐந்து மற்றும்‌ எட்டாம்‌ வகுப்பு தேர்வுகளில்‌
தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில்‌ மறுதேர்வு முறையையும்‌, அதிலும்‌ தேர்ச்சி பெறாத குழந்தைகள்‌ அதே வகுப்பில்‌ ஓராண்டு பயில வேண்டும்‌ என்ற முறையையும்‌ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.


தேசிய கல்விக்‌  கொள்கையைப்‌ பின்பற்றி நடத்தப்படும்‌ மத்திய அரசுப்‌ பள்ளிகளுக்கு, இந்தப்‌ புதிய
நடைமுறை பொருந்தும்‌ எனவும்‌ மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு எதிர்ப்பு


இதற்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து, பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என்று தெரிவித்து இருந்தது. தமிழ்நாட்டைப்‌ பொறுத்தவரை, தேசியக்‌ கல்விக்‌ கொள்கையைப்‌ பின்பற்றாமல்‌, மாநிலத்தின்‌ தேவைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக்‌ கல்விக்‌ கொள்கையை உருவாக்குவதற்காகத் தொடங்கிய பணிகள்‌ நிறைவுறும்‌ தருவாயில்‌ உள்ளதாகத் தமிழக அரசு கூறி இருந்தது


இந்த நிலையில் தற்போது மத்திய அரசைப் பின்பற்றி, 5, 8ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் பெரும்பாலும் சிபிஎஸ்இ கல்வி முறை பின்பற்றப்படுவதால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.