இந்தியாவில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் தொடர்ந்து மாணவர் சேர்க்கை சரிவடைந்த காரணங்களால், நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகளை நிரந்தரமாக மூட அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு (AICTE) உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 58 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முதலிடம் வகிக்கின்றன. நாடு முழுவதும் மூடப்பட்ட 58 கல்லூரிகளில், பெருமளவிலான கல்லூரிகள் இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்தவையே ஆகும். இங்கு தலா 12 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

அதேபோல மத்தியப் பிரதேச மாநிலத்தில் 8 கல்லூரிகள் இதே கல்வியாண்டில் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா மூன்று பொறியியல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

Continues below advertisement

தமிழ்நாட்டில் எத்தனை?

குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா இரண்டு நிறுவனங்கள் மூடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரியில் ஒரு பொறியியல் கல்லூரி மூடப்பட்டுள்ளது.

எந்தெந்த படிப்புகளுக்கு தடை?

இளங்கலை, முதுகலை மற்றும் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்புகளை வழங்கி வந்த தரமற்ற கல்லூரிகள் இதில் அடங்கும்.

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள்

  1. மாணவர்சேர்க்கைசரிவு: கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்த குறிப்பிட்ட 58 கல்லூரிகளில், AICTE நிர்ணயித்த குறைந்தபட்ச மாணவர் சேர்க்கை விகிதம் கூட எட்டப்படவில்லை. பல கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
  2. உள்கட்டமைப்புஇல்லாமை: தரமான ஆய்வகங்கள் (Labs), நூலகங்கள் மற்றும் வகுப்பறை வசதிகள் AICTE விதிமுறைகளின்படி பராமரிக்கப்படவில்லை.
  3. பேராசிரியர் பற்றாக்குறை: முழுநேர தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் மற்றும் போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் இன்றி இந்த கல்லூரிகள் இயங்கி வந்தது தணிக்கையில் அம்பலமாகியுள்ளது.

மாணவர்களின் நிலை என்ன?

அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட இந்த 58 கல்லூரிகளுக்கும் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய மாணவர் சேர்க்கையை நடத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த கல்லூரிகளில் ஏற்கனவே படித்து வரும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாது என AICTE உறுதியளித்துள்ளது. அந்த மாணவர்கள், அதே பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருகிலுள்ள வேறு தகுதிவாய்ந்த பொறியியல் கல்லூரிகளுக்கு உடனடியாக மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த AICTE தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே, விதியை மீறிய மற்றும் செயல்பட முடியாத நிலையில் உள்ள கல்லூரிகள் மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலும் உள்கட்டமைப்பு இல்லாத கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.