பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் இயக்குனர்கள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 9 இணை இயக்குநர்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிரடியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இணை இயக்குனர் நரேஷுக்குப் பதவி உயர்வு


இதன்படி, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் சேதுராம வர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசுத் தேர்வு துறை இணை இயக்குனர் நரேஷ் பதவி உயர்வு பெற்று தொடக்கக் கல்வித் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் லதா, அரசுத் தேர்வுத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உஷாராணி மாநில கல்வியில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.




இணை இயக்குநர்கள் 9 பேர் பணியிட மாற்றம்


இதற்கிடையே பள்ளிக் கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் 9 பேருக்கு இட மாறுதல் வழங்கப்பட்டது இதுகுறித்துத், துறையின் செயலர் குமர குருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில், ’’தொடக்கக்கல்வி இயக்குனரக நிர்வாக பிரிவில் பணியாற்றும் சுகன்யா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றும் ஞானகவுரி, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேல்நிலைக்கல்வியில் உள்ள கோபிதாஸ், தொடக்கக்கல்வி நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் ’’அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் பிரிவில் பணியாற்றும் ஸ்ரீதேவி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகள் இயக்குனரகத்தில் உள்ள சாந்தி, தொடக்க கல்வி இயக்குனரகத்தின், உதவி பெறும் பள்ளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


தனியார் பள்ளிகள் இயக்குனரகத்துக்கு மாற்றம்


பள்ளிக் கல்வி இயக்குனரக தொழிற்கல்விப் பிரிவில் உள்ள ராமகிருஷ்ணன், தனியார் பள்ளிகள் இயக்குனரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.


கள்ளர் சீரமைப்புப் பிரிவு இணை இயக்குனர் ஜெயகுமார், பள்ளிக்கல்வி இயக்குனரக தொழிற்கல்விப் பிரிவுக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் முனுசாமி, கள்ளர் சீரமைப்பு பிரிவுக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக உள்ள ஆனந்தி, ஒருங்கிணைந்த கல்வி திட்டமான சமக்ர சிக் ஷாவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்’’ என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.