2025- 2026ஆம் கல்வியாண்டில் மேல்நிலை பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. இதில் மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்குக் கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை பயன்படுத்தப்படுவது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
கூடுதல் நேரம்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்ச் 2026 மேல்நிலை பொதுத் தேர்வுகளில் தேர்வெழுத இருக்கும் மாற்றுத் திறனாளி தேர்வர்களில் கூடுதல் ஒரு மணி நேரம் சலுகை பெற்றவர்கள் தன் விருப்பத்தின்படி கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வெழுதலாம்.
இந்த நிலையில், மாற்றுத் திறனாளி தேர்வர்கள் கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வெழுத விரும்பவில்லை எனில், தேர்வு நேரமான 10.15 முதல் 1.15 வரை தேர்வறையில் முழு தேர்வு நேரம் முடிந்த பிறகு தேர்வர்கள் தன் விருப்பத்தின்படி செல்லலாம்.
படிவத்தை பூர்த்தி செய்வது முக்கியம்
எனினும் அதற்குப் படிவத்தை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு தேர்வறையை விட்டுச் செல்லலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், தேர்வர்களிடம் இருந்து பெறப்படும் படிவங்களை, ஒருங்கிணைத்து அனைத்து தேர்வுகள் முடிவடைந்ததும் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களை அறிவுறுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.
தேர்வு தேதிகள் தெரியுமா?
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு 26ஆம் தேதி வரை தேர்வுகள் நடந்து முடிய உள்ளன. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (மார்ச் 11) தேர்வு தொடங்குகிறது. இந்த மாணவர்களுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி அன்று வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.