11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இதற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதன்படி,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை. தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏப்ரலில் முடிந்த தேர்வுகள்


2022- 23ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் முடிந்தன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் நடைபெற்றன. ஏப்ரல் 11ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவு பெற்றது. 


மாணவர்களுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு  ஜூன் மாதம் 1-ம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஜுன் 5-ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.


ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12 (நாளை மறுநாள்) அன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதேபோன்று 1 முதல் ஐந்தாம் வகுப்புக்கு ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.


11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?


இந்த கல்வியாண்டில் வகுப்புகள் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.  இதற்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. 


அதன்படி, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளது. அதேபோன்று, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை  என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் செயல்படும் சில பள்ளிகள் 11ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை நடத்தாமல், 11ஆம் வகுப்பு பாதியில் இருந்து 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்துவதாக புகார் எழுந்தது. இதன் காரணமாகவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11ஆம் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க 


School Special classes: தாமதமாக திறக்கப்படும் பள்ளிகள்.. சனிக்கிழமைதோறும் பள்ளிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு..


Research Fellowship: தமிழ்நாடு ஆவண காப்பகத்தில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி படிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?