2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் பதிவேற்றம் செய்தல் குறித்த அறிவுரைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கியுள்ளது. 

Continues below advertisement

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் பெயர்ப்பட்டியலைத் தயாரிப்பதற்கு, EMIS வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் கீழ்க்காணும் தகவல்கள் பயன்படுத்தப்பட உள்ளன:

  1. மாணாக்கரின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

    Continues below advertisement

  2. பிறந்த தேதி

  3. புகைப்படம் (jpeg, jpg)

  4. பாலினம்

  5. இனவகைப்பாடு

  6. மதம்

  7. மாணாக்கரின் பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

  8. மாற்றுத் திறனாளி வகை மற்றும் சலுகைகள்

  9. கைபேசி எண்

  10. பயிற்று மொழி

  11. மாணாக்கரின் வீட்டு முகவரி

  12. பெற்றோரின் ஆண்டு வருமானம்

விரிவான அறிவுரைகள்:

பள்ளி மாணவர்களின் மேற்குறிப்பிட்ட தகவல்களைப் பயன்படுத்தி, 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.

அக்டோபர் 23ஆம் தேதி வரை அவகாசம்

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும், 06.10.2025 முதல் 23.10.2025 வரையிலான நாட்களில் EMIS வலைத்தளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐப் பயன்படுத்தி, தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மேற்குறிப்பிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்த்து, ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

விவரங்களைச் சரிபார்த்தல்

மேற்காண் விவரங்களைச் சரியான முறையில் பதிவேற்றம் செய்ய, இவ்வலுவலகத்தால் வழங்கப்படும் வெற்று Declaration Form-ஐப் பதிவிறக்கம் செய்து, தேர்வர்களிடம் வழங்கி, பூர்த்தி செய்த தேர்வரது பெற்றோர்/ பாதுகாவலர் படிவத்தினைச் சரிபார்த்து கையொப்பம் பெற்று தங்கள்வசம் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், மாணவரின் பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு பிறப்புச் சான்றிதழ் நகலையும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும் வகையில் பள்ளி ஆவணங்கள்/ ஆதார் அட்டை நகலினையும் இணைத்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் வழங்கிய மேற்காண் விவரங்களின் அடிப்படையிலும், பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றியும் EMIS வலைத்தளத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1. மாணவரின் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்):

  • மாணவரது பெயர் பிறப்புச் சான்றிதழில் உள்ளவாறே இருக்க வேண்டும்.

  • பெயர் முதலிலும், அதனைத் தொடர்ந்து தலைப்பெழுத்தும் இடம்பெறும் வகையில் இருக்க வேண்டும்.

  • பெயருக்கும் தலைப்பெழுத்துக்கும் இடையில் (Between name and initial) ஒரு இலக்க இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும் (புள்ளி வைக்கக் கூடாது).

  • இரு தலைப்பெழுத்துக்கள் இருப்பின், இரு தலைப்பெழுத்துக்களுக்குமிடையே ஒரு இலக்க இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும்.

  • பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பெயரில் சில எழுத்துக்கள் திருத்தம் கோரும்பட்சத்தில், சில எழுத்துக்களை மட்டும் மாற்றம் செய்துகொள்ளலாம்.

  • தமிழில் பதிவேற்றம் செய்யும்போது, மாணவரது தந்தையின் பெயர் கண்ணன் எனில், தலைப்பெழுத்து 'க' என இருக்க வேண்டும்.

  • EMIS வலைத்தளத்தில் உள்ள மாணவரது பெயர் / பெற்றோரது பெயர் உள்ளிட்ட தமிழில் உள்ள விவரங்கள் அனைத்தும் UNICODE Font -ல் மட்டுமே இருக்க வேண்டும். வேறு ஏதேனும் தமிழ் Font -ல் விவரங்கள் இருந்தால், அதனை முழுமையாக நீக்கம் செய்துவிட்டு, UNICODE Font -ல் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • அரசிதழில் பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே அரசிதழின் நகலைப் பெற்று, அதன் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

2. பிறந்த தேதி:

  • பிறந்த தேதியினை பிறப்புச் சான்றிதழுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

  • தேர்வு நடைபெறும் மாதத்தின் முதல் நாளில் கண்டிப்பாக 14 வயது நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும்.

  • 14 வயது நிறைவு செய்யாதவர்களாக இருப்பின், பார்வை 1-ல் காணும் வயது தளர்வு அரசாணையின்படி, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்/முதன்மைக் கல்வி அலுவலரிடம் வயது தளர்விற்கான ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும்.

  • மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர், பிறந்த தேதி மாற்றம் கோருவோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

3. புகைப்படம்:

  • சமீபத்தில் எடுக்கப்பட்ட மாணவரது மார்பளவு புகைப்படத்தை (Passport size photo) மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படம் (jpeg, jpg) வடிவில் 50 kb-க்குள் இருக்க வேண்டும்.

4. மாணவரது பெற்றோர் / பாதுகாவலர் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்):

  • பெற்றோர் (தாய் மற்றும் தந்தை) / பாதுகாவலரது பெயர்களை, அவர்களது பள்ளி ஆவணங்கள் / ஆதார் அட்டையில் உள்ளவாறு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தவறில்லாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • பெற்றோர் (தாய் மற்றும் தந்தை) / பாதுகாவலரது பெயர்களில் ஏதேனும் திருத்தம் இருப்பின், ஆதார் அட்டையில் உள்ளவாறு சில எழுத்துக்களை மட்டும் திருத்தம் செய்துகொள்ளலாம்.

5. கைபேசி எண்:

  • தேர்வு முடிவுகள் மாணாக்கரின் பெற்றோர் / பாதுகாவலரது கைபேசி எண்ணுக்கே குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்பதால், பதிவேற்றம் செய்யப்படும் கைபேசி எண் சரியானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பு:

  • பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் அனைத்து தேர்வர்களும் பகுதி - I -ல் தமிழ் மொழியை மட்டுமே மொழிப்பாடமாக தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

  • பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விவரங்களையும் EMIS வலைத்தளத்தில் சென்று சரிபார்த்து, திருத்தங்கள் இருப்பின் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களிலேயே மேற்கொள்ளுதல் வேண்டும்.

  • பெயர்ப்பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படுகிறது. தேர்வரின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் அடிப்படையில் தான் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எனவே, தேர்வரின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றோர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் தயார் செய்ய வேண்டும்.

  • பதிவேற்றம் செய்யப்பட்ட மாணாக்கரின் விவரங்களில் தவறுகள் ஏதும் ஏற்படின், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும். எனவே இப்பணியினைத் தலைமை ஆசிரியர் தமது நேரடி கவனத்தில் மிகுந்த பொறுப்புடனும், சிரத்தையுடனும் மேற்கொள்ள வேண்டும்.

  • எக்காரணத்தைக் கொண்டும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பின்னர், திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு அனுப்பக்கூடாது என்பதும் வலியுறுத்தி தெரிவிக்கப்படுகிறது.

  • மேலும், மேற்குறிப்பிட்டவாறு பதிவேற்றம் செய்த மாணவர்களின் விவரங்களின் அடிப்படையில் இடைநிலை பொதுத் தேர்வுக்கான பெயர்ப்பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துதல் போன்ற பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மேற்கொள்வதற்கான தேதிகள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

முக்கிய குறிப்பு:

  • தங்கள் பள்ளியில் இடைநிலைப் பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் Unique Disability Identity Card அல்லது மருத்துவக்குழுவால் வழங்கப்படும் மருத்துவச் சான்றிதழையும் பெற்று, மேற்காண் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க அறிவுறுத்த வேண்டும்.

  • இத்துறையால் பெயர் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்படும் நாட்களில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மேற்காண் சான்றிதழினைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு மட்டுமே தேர்வெழுதும்போது சலுகைகள் வழங்கப்படும். பின்னர் சலுகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்பட மாட்டாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.